X-Press Pearl கப்பல் விசயம் தொடர்பாக வெளியாகும் பல உண்மைகள் அதில் பெரும் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அதனால் நவம்பர் 14 தேர்தலின் பின் சனாதிபதி AKD அரசு தீவிர விசாரணை ஒன்றை செய்ய அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு X-Press Pearl கப்பல் நைத்திரிக் அமிலம் கசிந்து கொழும்பு கடலில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தது. அதனால் இப்பகுதியில் மீன்பிடியும் தடைப்பட்டு இருந்தது.
இலங்கையின் 40 அறிவாளர்களை கொண்ட Marine Environmental Protection Authority (MEPA) அமைப்பு மேற்படி கப்பலின் காப்புறுதி நிறுவனமான லண்டன் நகரில் உள்ள London P&I Club இடமிருந்து $6.4 பில்லியன் ($6,400 மில்லியன்) நட்டஈடு பெற முனைந்தது. ஆனால் இந்த முயற்சி ரணில் அரசால் பல முனைகளில் முறியடிக்கப்பட்டு உள்ளது.
1) சர்வதேச கடல் சார் சட்டப்படி இவ்வகை இழப்பீடுகள் பாதிப்பு இடம்பெற்று 24 மாத காலத்துள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அனால் இலங்கை 23ம் மாதமே வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை அக்கால Attorney General Sanjay ராஜரத்தினம் தாக்கல் செய்துள்ளார். அவர் இந்த விசயம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறவில்லை. இவரின் அலுவலகம் கப்பல் உரிமையாளரின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்திருந்தாலும், MEPA யின் சட்டப்படியான கேள்விகளுக்கு இழுத்தடித்தே பதில் கூறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பின் அக்கால அமைச்சர் வியதாச ராஜபக்ச வழக்கு பதிவு பிந்தியதற்கு MEPA யே காரணம் என்று MEPA மீது பழியை விட்டிருந்தார்.
2) விபத்து இலங்கையில் இடம்பெற்று இருக்க, காப்புறுதி நிறுவனம் லண்டனில் இருக்க அக்கால இலங்கை அரசு இந்த வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தது.
சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள Convention of Limitation of Liability for Maritime Claims (LLMC Convention) கடல் சார் விபத்துகளுக்கான அதிகூடிய நட்டஈடாக $24.7 மில்லியனை மட்டுமே கொண்டுள்ளது. அதனாலேயே காப்புறுதி நிறுவனத்தின் நன்மைக்காக சிங்கப்பூர் வழக்குக்கான இடமாக திணிக்கப்பட்டிருக்கலாம்.
வழக்கு தாக்கலுக்கு சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டதையும் அமைச்சர் வியதாச ராஜபக்ச நியாயப்படுத்தி உள்ளார்.
3) இலங்கை அந்நியசெலவாணிக்கு அலைந்த காலத்தில் ரணில் அரசு காப்புறுதி மூலம் கிடைக்கும் பணத்தை வலுவிழந்த இலங்கை ரூபாயில் பெற இணங்கியுள்ளது. ரணில் அரசின் அதிகாரிகள் ரூபாய் மூலம் நட்டஈடை பெற கீழ்நிலை அதிகாரிகளை வற்புறுத்தி உள்ளனர்.
சிறிது காலத்துக்கு முன் டாலர் ஒன்றுக்கு 200 ரூபாய் கிடைத்திருந்தாலும் பின்னர் டாலர் ஒன்றுக்கு 400 ரூபாய் கிடைத்திருந்தது. அதனால் டாலர் மூலம் இயங்கும் காப்புறுதி நிறுவனம் இலங்கை ரூபாய் மூலம் வழங்கிய மிக சிறிய நட்டஈட்டில் மேலும் 50% நயம் அடைந்துள்ளது.
அது மட்டுமன்றி பணம் கடத்தும் கும்பல்களும் (money laundering) இலங்கை ரூபாய் மூலமான பணம் செலுத்தலை பயன்படுத்தி இலங்கையில் இருந்து கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்திருக்கலாம்.
இதுவரை இலங்கை $12.5 மில்லியன் மட்டுமே London P&I Club காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. அதில் $11,945 (3.5 மில்லியன் ரூபாய்) MEPA அமைப்புக்கும், $10.5 மில்லியன் (3 பில்லியன் ரூபாய்) Fisheries and Aquatic Resources திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன.
4) வழக்கை சிங்கப்பூரில் தாக்கல் செய்ததால் வழக்கறிஞர் செலவு $10 மில்லியன் ஆகியுள்ளது. அதனால் மிகுதி $14 மில்லியனே நட்டஈடாக கிடைத்துள்ளது. ரணில் அரசு வழக்கறிஞர் செலவு $4.2 மில்லியன் ஆக மட்டுமே இருக்கும் என்று முன்னர் கூறியிருந்தது. ஆனால் அது பின் $10 மில்லியன் ஆனது.
இந்த உண்மைகள் பலவற்றை Al Jazeera செய்தி நிறுவனமும், பிரித்தானியாவின் Watershed Investigations என்ற பத்திரிகையாளர் அமைப்பும் தேடி அறிந்துள்ளன.