சுவிற்சலாந்தின் முதலாவது பெரிய வங்கியான UBS (முன்னர் Union Bank of Switzerland) தற்போது முறியும் நிலையில் உள்ள Credit Suisse என்ற சுவிற்சலாந்தின் இரண்டாவது பெரிய வங்கியை 3 பில்லியன் சுவிஸ் பிரங்குக்கு ($3.24 பில்லியன்) கொள்வனவு செய்யவுள்ளது.
இந்த கொள்வனவை அரசுகளே முன் நின்று செய்துள்ளன. மேற்கு நாடுகளில் பெரும் வங்கிகள் முறிந்தால், அந்த நாடுகளில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை அடையும். 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் சில பெரிய வங்கிகள் முறியும் நிலையில், அமெரிக்க அரசும் வரிப்பணத்தில் வங்கிகளை காப்பாற்றி இருந்தது.
இந்த கொள்வனவுக்கு சுவிஸ் அரசு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த கொள்வனவால் UBS வங்கிக்கு நட்டம் ஏற்பட்டால் சுவிஸ் அரசு 9 பில்லியன் பிராங் வரை ($9.7 பில்லியன்) நடத்தை பொறுப்பெடுக்கும். ஆனால் மேலும் வங்கிகள் முறியும் நிலைக்கு சென்றால் அரசுகள் அப்போதும் உத்தரவாதம் அளிப்பது கடினமாகும்.
கடந்த பல ஆண்டுகளாக மேற்கு நாடுகளில் வீட்டு கடன் வட்டி ஏறக்குறை பூச்சியமாக இருந்தது. அதனால் பலரும் தமது நிலைக்கு மேலான பெறுமதிகளுக்கு வீடுகளை கொள்வனவு செய்திருந்தனர். ஆனால் பணவீக்கம் காரணமாக வங்கி வட்டி அதிகரிக்க கூடவே வீட்டுக்கடன் (mortgage) வட்டியும் மிகையாக அதிகரிக்க வங்கிகள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
அமெரிக்காவின் SVB வங்கி, சுவிஸின் Credit Suisse வங்கி போன்றவற்றுடன் மேற்படி ஆபத்து இல்லாதொழிய போவதில்லை. மேற்கில் வங்கி கடன் வட்டி குறையாத நிலையில் ஆபத்து தொடரும்.