ஆப்கானிஸ்தானின் தலிபானை கட்டுப்படுத்த ரஷ்யாவினதும், சீனாவினதும் ஆதரவு தேவை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் (Foreign Secretary) Dominic Raab கூறியுள்ளார். மேற்கு நாடுகள் தற்காலங்களில் சீனாவுடன் முரண்பட்டாலும், சீனாவின் உதவியை நாடுவதை தவிர்க்க முடியாது என்றுள்ளார் Dominic Raap.
ஆப்கான் அரச படைகளின் தரம், தலிபானின் தரம் ஆகியவற்றின் அமெரிக்காவின் கணிப்புகள் தவறியதால் அமெரிக்கா ஆப்கான் அரசுக்கு வழங்கிய பல தரமான ஆயுதங்கள், விமானங்கள் எல்லாம் இன்று தலிபான் கைகளை அடைந்துள்ளன.
அதில் மூன்று C-130 வகை இராணுவ நகர்வு விமானங்கள் (ஒவ்வொன்றும் 19,000 kg பாரத்தை காவக்கூடியது, ஒவ்வொன்றும் $12 முதல் $30 மில்லியன் பெறுமதியானவை), 23 Super Tucano (A-29) வகை யுத்த விமானங்கள், 45 Black Hawk ஹெலிகள் (ஒவ்வொன்றும் சுமார் $21 மில்லியன் பெறுமதியானவை), 50 MD-530 வகை ஹெலிகள், 30 இராணுவ வகை Cessna விமானங்கள் ஆகியனவும் அடங்கும்.
ஆனாலும் தொழில்நுட்பம் மிகையான விமானங்களை இயக்க நன்று பயிற்றப்பட்ட விமானிகளும், பராமரிப்பாளரும் தேவை. அவ்வகை வல்லுநர் தலிபானிடம் தற்போது இல்லை.
தலிபான் கைப்பற்றிய D-30 Howitzer வகை எறிகணை ஏவிகள் அவர்களின் பலத்தை அதிகரிக்கும். இழுத்து செல்லக்கூடிய இவை 122 mm எறிகணைகளை 15 முதல் 22 km தூரத்துக்கு எறியும் வல்லமை கொண்டவை. தலிபான் கைப்பற்றிய அமெரிக்காவின் Humvee வகை இராணுவ வாகனங்களும் தலிபான் கைகளை வலுப்படுத்தும்.
மேற்படி விமானங்கள், ஹெலிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களை ஆராய ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் பெரும் ஆவல் கொண்டிருக்கும்.
சில யுத்த விமானங்கள் ஆப்கானிஸ்தான் இராணுவத்துடன் உஸ்பெக்கிஸ்தான் பறந்தும் உள்ளன.