Pfizer (f-பைசர்), BioNTech ஆகிய இரண்டு மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்து 90% தடுப்பை அளிக்கிறது என்று அந்த நிறுவனங்கள் இன்று கூறி உள்ளன. அதனால் இந்த தடுப்பு மருந்து ஒரு திடமான கரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது.
மேற்படி தடுப்பு மருந்து, 3 ஆம் கட்ட பரிசோதனையாக, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய 6 நாடுகளில் வாழும் 43,500 மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இவர்களில் எவருக்கும் பாதகமான பக்க விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மருந்து இரண்டு பகுதியாக வழங்கப்படும் (two doses). இரண்டு வழங்களுக்கும் இடைப்பட்ட காலம் 3 கிழமைகள். மேற்படி 90% மக்கள் 2 ஆம் பகுதி வழங்கப்பட்டு 7 தினங்களுள் கரோனா எதிர்ப்பு வலிமையை கொண்டு இருந்தனராம். பரிசோதனைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முடிவுக்குள் தாம் 50 மில்லியன் மருந்துகளை (doses) தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளனர். 2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் 1.3 பில்லியன் மருந்துகளை தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். ஆளுக்கு 2 மருந்துகள் (doses) தேவை.
இந்த மருந்தில் முதல் 100 மில்லியன் அமெரிக்காவுக்கும், பின்னர் கனடா, பிரித்தானியா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்படும்.