International Consortium of Investigative Journalists (ICIJ) தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளில் இலங்கையின் ராமலிங்கம் பாஸ்கரலிங்கம் (வயது 80) தொடர்பாகவும் தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. பாஸ்கரலிங்கம் 1989ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையான காலத்தில் 3 இலங்கை அரசியல் தலைமைகளுக்கு ஆலோசகராக இருந்தவர்.
1989 – 1994 வரையான காலத்தில் இவர் சனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் நிதி அமைச்சின் செயலாளராக பதவி வகித்தவர். பிரேமதாச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் இவர் டிங்கிரி பண்டா விஜேதுங்கவுக்கு கீழ் பணியாற்றியவர். 1994ம் ஆண்டு இவர் பிரித்தானியா சென்று இருந்தார்.
2002 – 2004 வரையான காலத்திலும், பின் 2015 – 2018 வரையான காலத்திலும் இவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீழ் பொருளாதர ஆலோசகராக பணியாற்றியவர்.
2012ம் ஆண்டில் பாஸ்கரலிங்கம் British Virgin Island இல் ஒரு trust அமைப்பை ஆரம்பித்து இருந்தார். அதில் இவர் தன்னை ஒரு ஓய்வு பெற்றவர் என்று பதிந்துள்ளார். அதில் பங்காளர்களாக இவரின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இந்த trust கிழக்கு கொழும்பில் உள்ள Horizon College of Business and Technology என்ற தனியார் கல்வி நிலையம் ஒன்றில் முதலீடு செய்துள்ளது. இதை ICIJ விசாரணை செய்வதை அறிந்த பாஸ்கரலிங்கம் மேற்படி trust ஐ மூடி, பின் மகனின் பெயரில் இன்னொன்றை ஆரம்பித்து உள்ளார் என்கிறது ICIJ.
2015ம் ஆண்டு Trident Trust என்ற நிதியத்தின் இருந்து $2.6 மில்லியன் பணத்தை தனக்கு நகர்த்த பாஸ்கரலிங்கம் கூறியுள்ளார். அப்பணம் மூலம் இவர் பிரித்தானியாவில் பல சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளார் என்கிறது ICIJ.
இவரிடம் The Aran Trust, Earth-Hold Investments Inc., The Aran II Trust, Tanamar Holdings Limited ஆகிய நிதியங்கள் இருந்துள்ளன.