பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொள்ளும் 32 நாட்டு அணிகளின் வல்லமை தரவுகளை கணினிகளில் புகுத்தி Artificial Intelligence முறைமையில் வெற்றிகளை கணித்து இருந்தது. ஆனால் அந்த கணிப்பில் வெற்றி பெறும் என்று கணித்த 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளன. அதனால் Oxford கணிப்பின் நம்பகத்தன்மை 50% ஆக மட்டுமே உள்ளது – அது நாணயம் ஒன்றை வீசி தலையா, பூவா பார்ப்பது போன்றாகி உள்ளது.
Oxford கணிப்பில் மிகவும் தவறி இருப்பது பெல்ஜியம் அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் வென்று, இறுதி போட்டியில் பிரேசிலுடன் மோதி இரண்டாம் நிலையை அடையும் என்று கணிப்பிட்டதே. ஆனால் பெல்ஜியம் அணி முதல் 16 அணிக்குள் அமையாததால் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டு வீடு செல்கிறது.
நெதர்லாந்து, அமெரிக்கா, ஆர்ஜென்டீனா, அஸ்ரேலியா, ஜப்பான், குரோஷியா, பிரேசில், தென் கொரியா, பிரித்தானியா, செனெகல், பிரான்ஸ், போலந்து, மொரோக்கோ, ஸ்பெயின், போர்த்துக்கல், சுவிற்சலாந்து ஆகிய 16 நாடுகளே FIFA 2022 போட்டியில் தொடர்ந்து பங்கு கொள்கின்றன.
கட்டார், கனடா, எக்குவடோர், வேல்ஸ், ஈரான், டென்மார்க், துனிசியா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ, பெல்ஜியம், Costa Rica, ஜெர்மனி, கானா, Uruguay, கமரூன், சேர்பியா ஆகிய 16 நாடுகளும் தோல்விகளை தழுவி போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டு உள்ளன.
டிசம்பர் 3ம் திகதி முதல் முதல் நிலையில் உள்ள 16 அணிகளுள் போட்டிகள் இடம்பெறும். அவற்றுள் வெற்றி பெறும் 8 அணிகளுக்கு இடையிலான போட்டிகள் டிசம்பர் 9ம் திகதி முதல் இடம்பெறும். அதில் வெற்றி பெறும் 4 அணிகள் 1ம், 2ம், 3ம் இடங்களுக்கான போட்டிகளில் விளையாடும்.