பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் AstraZeneca என்ற மருத்துவத்துறை நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் AZN222 என்ற கரோனா தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட பரிசோதனை இன்று இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் பாரதூரமான பக்கவிளைவுக்கு உள்ளானதே காரணம்.
இந்த மருந்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பரிசோதனைகள் பாதகமான பக்கவிளைவுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. மூன்றாம் பரிசோதனைக்கு பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 30,000 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அமெரிக்க சனாதிபதி நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலுக்கு முன் இந்த மருந்தை வெளியிட விரும்பி இருந்தார். அவ்வாறு செய்வது தனது வெற்றிக்கு உதவும் என்று கருதுகிறார். அதற்கு ஏற்ப விதிகளுக்கு முரணாக பரிசோதனைகளை விரைவு செய்யவும் அவர் அழுத்தம் வழங்குகிறார்.
அரசில் இலாபங்களுக்காக விதிமுறைகளுக்கு முரணாக பரிசோதனைகளை விரைவு செய்யப்போவது இல்லை என்று AstraZeneca, Johnson & Johnson, BioNTech, GlaxoSmithKline, Pfizer, Merk, Moderna, Sanofi, Novavax ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளன.
AZN1222 என்ற மருந்தையே இந்தியா தயாரிக்க திட்டமிட்டு இருந்தது.
ரஷ்யாவும், சீனாவும் தமது கரோனா தடுப்பு மருந்துகளை தெரிவுசெய்யப்பட்ட பணியாளர்களுக்கு வழங்க ஆரம்பித்து உள்ளன.