அரசியல் கட்சிகளுக்கு அப்பால், இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் ஒரு புரட்சி இடம்பெற்றது. Gota Go Gama என்று ஆரம்பித்து, Mina Go Gama என்று வளர்ந்த இந்த புரட்சி இலங்கையின் உச்சத்தில் இருந்த ஆட்சி குடும்பத்தை விரட்ட முனைந்து. அந்த குடும்பத்தின் பிரதானியான பிரதமர் மகிந்தவை விரட்டியும் இருந்தது.
இந்த புரட்சி இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு நிகரான ஒரு புரட்சியாக தொடர்கிறது. இந்த வன்முறை அற்ற, நியாயமான புரட்சியையே உலகம், குறிப்பாக சனநாயக உலகம் ஆதரித்திருக்க வேண்டி இருந்தது.
ஆனால் தம்மை சனநாயக காவலர் என்று பறை சாற்றும் அமெரிக்காவின் செயல் நம்மை வியக்க வைத்துள்ளது. இலங்கையில் மக்கள் புரட்சி இடம்பெறும் வேளையில் பின் கதவால் தமக்கு கை பொம்மையாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்கும் பணியில் உள்ளது அமெரிக்கா.
ரணில் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைந்தவர். அவரின் தலைமையிலான UNP கட்சி ஒரு ஆசனத்தையும் வென்று இருக்கவில்லை. ரணில் மட்டும் தேசிய பட்டியல் மூலம், பின் கதவால், பாராளுமன்றம் சென்றவர். அப்படியான ஒருவரை பிரதமராக நியமித்து சில நிமிடங்களில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் Julie Chung வாழ்த்தி உள்ளார்.
இவ்வளவு வேகமாக தூதுவர் Julie Chung தனது கூற்றை வெளியிட்டது, அவரும் ரணிலை பிரதமராக்கும் பணியில் அங்கம் கொண்டிருந்தாரா என சந்தேகிக்க வைக்கிறது. ஒரு அமைச்சரையாவது தனது கட்சியான UNP யிலிருந்து பெற முடியாத ரணில் பிரதம மந்திரியாவது எப்படி? இதுவா அமெரிக்காவின் சனநாயகம்?
அதுமட்டுமன்றி அமெரிக்க தூதுவர் தமது கட்டுப்பாட்டில் உள்ள IMF ஐயும் ‘carrot and stick’ கில் உள்ள கரட் ஆக பாவித்து உள்ளார்.
இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?
(இளவழகன், May 12, 2022)