சீன அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட The Battle at Lake Changjin (长津湖, Zhǎng jīn hú) என்ற திரைப்படம் அண்மையில் வெளிவந்த James Bond திரைப்படமான No Time To Die திரைப்படத்தையே பின்தள்ளி அதிக பணத்தை உழைத்துள்ளது.
அக்டோபர் 1ம் திகதி முதல் இரண்டு கிழமைகளில் The Battle at Lake Changjin $633 மில்லியன் பணத்தை உழைத்து உள்ளது. தற்போது அதன் உழைப்பு $740 மில்லினுக்கும் அதிகம். இந்த திரைப்படத்துக்கான மொத்த செலவு $200 மில்லியன் மட்டுமே.
Hollywood திரைப்படங்கள் அமெரிக்க தேசிய உணர்வை தூண்டும் நோக்கில் தயாரிக்கப்படுவது போல் இந்த படம் சீன தேசிய உணர்வை தூண்ட தயாரிக்கப்பட்டது.
1950களில் கொரியாவில் இடம்பெற்ற யுத்தத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் கொரியாவின் உதவிக்கு வந்த சீன இராணுவம் அங்கு ஆக்கிரமித்து இருந்த அமெரிக்க படைகளை விரட்டியதாக காட்டுகிறது. வடகொரியாவின் உதவிக்கு வந்த சீன படைகள் தென்கொரியாவின் உதவிக்கு வந்திருந்த அமெரிக்க படைகளை வென்று இருந்தாலும், இந்த யுத்தம் Cold War யுத்தங்களில் ஒன்றே.
1910ம் ஆண்டு ஜப்பான் கொரியாவை ஆக்கிரமித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ரஷ்யாவும், அமெரிக்காவும் 38ம் அகலாங்கு வழியே கொரியாவை (கிழக்கு, மேற்கு ஜேர்மனி போல்) இரண்டு துண்டாக்கின. 1950ம் ஆண்டு வடகொரியா தெற்கை ஆக்கிரமித்தது. உதவிக்கு வந்த அமெரிக்கா தலைமையிலான மேற்கின் படைகள் வடக்கை சீன எல்லையோர Yalu ஆறு வரை தள்ளியது. உடனே சீனா தனது படைகளை அனுப்பி அமெரிக்க படைகளை மீண்டும் 38ம் அகலாங்கு வரை தள்ளியது. அக்காலத்து கதையே மேற்படி திரைப்படம்.
1950ம் ஆண்டு நவம்பர் 27 முதல் டிசம்பர் 13 வரை Changjin வாவி பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டைக்கு சுமார் 1,000 அமெரிக்க படையினரும் 20,000 சீன படையினரும் பலியாகி இருந்தனர்.
சுயமாக வளரும் சீன திரைப்படத்துறை மெல்ல அமெரிக்காவின் Hollywood தயாரிப்புகளுக்கு போட்டியாக வளர்கிறது. அதனால் Hollywood மிகப்பெரிய சீன சந்தையை முழு அளவில் அடைய முடியாது உள்ளது. அத்துடன் ஆண்டு ஒன்றில் 34 வெளிநாட்டு படங்களையே சீனா அனுமதிக்கும்.