International Space Station (ISS) என்ற சர்வதேச விண் ஆய்வுகூடத்தில் இருந்து தாம் 2024ம் ஆண்டில் வெளியேற உள்ளதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பாராத அமெரிக்கா மாற்று வழிகளை கையாள தள்ளப்பட்டு உள்ளது.
Roscosmos என்ற ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் Yuri Borsov இந்த அறிவிப்பை செய்துள்ளார். அவர் முன்னர் இணங்கியதற்கு ஏற்ப தாம் 2024ம் ஆண்டு வரை ISS பணிகளில் பங்கு கொள்வர் என்றும் அதன் பின் ISS இல் இருந்து வெளியேறுவர் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்யா தனது ஆய்வுகூட பகுதியை ISS இல் இருந்து பிரித்து எடுத்து தமது சொந்த விண்வெளி ஆய்வு கூடத்தை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனா தனது சொந்த ஆய்வுகூடத்தை ஏற்கனவே அமைத்து வருகிறது.
அமெரிக்காவின் நாசா (NASA) தமக்கு ரஷ்ய வெளியேறுவது தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. அமெரிக்கா 2030ம் ஆண்டு வரை ISS ஆய்வு கூடத்தை பயன்படுத்தும் என்றும் நாசா தலைவர் Bill Nelson கூறி உள்ளார். ரஷ்யா வெளியேறினால் “it is the end of ISS” என்று கூறியுள்ளார் முன்னாள் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பின் Director General Jan Worner.
ரஷ்யாவின் இடத்தை SpaceX போன்ற அமெரிக்க தனியார் நிறுவனங்கள் நிரப்ப முனையலாம். மாற்று வழியாக, ரஷ்யா இணங்கினால், ரஷ்யாவின் சேவையை மேற்கு பெருமளவு பணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம்.
ISS ஆய்வுகூடம் அமெரிக்கா (நாசா), ரஷ்யா (Roscosmos), ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளால் 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி ஏவப்பட்டது. மொத்தம் 7 பேரை கொண்டிருக்கக்கூடிய இது சுமார் 400 km உயரத்தில் உலகை வலம் வருகிறது.
இதன் நீளம் 73 மீட்டர், எடை 444,615 kg. மணித்தியாலத்துக்கு 27,000 km வேகத்தில் வலம் வரும் இது ஒரு தடவை பூமியை வலம்வர 92.68 sec தேவை. அதனால் இது நாள் ஒன்றில் 15.49 தடவைகள் பூமியை வலம் வரும்.