சீனாவின் Huawei நிறுவனத்தின் chief financial officer (CFO) ஆக பதவி வகித்த Meng Wanzhou இன்று கனடாவில் விடுதலை செய்யப்படுகிறார். இவரும் அமெரிக்காவும் இன்று வெள்ளி செய்துகொண்ட இணக்கத்துக்கு அமையவே Meng விடுதலை செய்யப்படுகிறார்.
2018ம் ஆண்டு Meng வான்கூவர் விமான நிலையத்துக்கு வந்த பொழுது அமெரிக்க ரம்ப் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா அவரை கைது செய்திருந்தது. அவருக்கு எதிரான அமெரிக்காவின் வழக்கில் பங்கெடுக்க அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் கனடாவும், அமெரிக்காவும் இதுவரை காலமும் செயற்பட்டு வந்தன.
ஆனால் அமெரிக்கா இன்று வெள்ளி திடீரென Meng தரப்புடன் ஒரு (நான் குற்றவாளி அல்ல, ஆனால் சிறிய தவறு செய்துள்ளேன் என்று கூறும்) ஒப்பந்தத்துக்கு வந்துள்ளது. அவரை நாடுகடத்தும் முயற்சியும் கைவிடபப்டுகிறது. அதனால் Meng க்கு எதிராக சொந்த வழக்கு எதையும் கொண்டிராத கனடா அவரை உடனடியாக விடுதலை செய்யும்.
Meng மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஈரான் மீதான அமெரிக்காவின் தடை தொடர்பானது. Skycom என்ற ஒரு நிறுவனம் மூலம் Huawei ஈரானுக்கு தனது தொழில்நுட்ப உபகரணங்களை விற்பனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அந்த விற்பனைக்கு Meng காரணம் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. Meng உண்மையை கூறாத காரணத்தாலேயே HSBC வங்கி மேற்படி விற்பனைக்கு உதவி செய்தது என்றும் அமெரிக்கா கூறி இருந்தது.
Meng கனடாவில் தடுத்து வைக்கப்பட்டவுடன் Michael Kovrig, Michael Spavor ஆகிய இரண்டு கனடியர் சீனாவில் உளவு செய்தனர் என்று கூறி கைது செய்யப்பட்டனர். சீன நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட Spavor தற்போது சீனாவில் 11 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
Meng ஐ தடுத்து வைத்ததன் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை. இடைத்தரகராக இருந்து சீனாவுடன் முரண்பட்ட கனடா தற்போது கனடியர் இருவரை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது.
உலகின் மிக பெரியதோர் தொழிநுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்தை 1987ம் ஆண்டு ஆரம்பித்த Ren Zhengfei என்பவரின் மூத்த மக்களே Meng. Ren 1983ம் ஆண்டு வரை சீனா இராணுவத்தில் பணியாற்றியவர்.