(இளவழகன், 2021-12-20)
இன்று Bitcoin என்ற சொல்லை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சிலர் இதை கொள்வனவு செய்தும் இருக்கலாம். Bitcoin மட்டுமல்லாது இன்று Ethereum, XRP, Tether, Cardano, Polkadot, Stellar, USD Coin என்று பல digital நாணயங்கள் உண்டு. இவற்றை cryptocurrency அல்லது crypto என்று அழைப்பர். Cryptocurrency என்றால் என்ன?
Bitcoin ஐ ஒரு நாணயம் என்று பலரும் அழைத்தாலும் ஒரு சாதாரண நாணயத்திற்கு உள்ள பல பண்புகள் Bitcoin க்கு இல்லை. முதலாவது, நாணயம் ஒரு அரசால் அச்சிடப்படுவது. ஆனால் Bitcoin போன்ற crypto எந்தவொரு அரசின் கட்டுப்பாடிலும் இல்லை. இரண்டாவது, நாணயம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் அந்த நாட்டின் நம்பக தன்மையையும் பிரதிபலிப்பது. ஒரு நாட்டின் பெருளாதாரம் வளர்ந்தால், அந்நாட்டின் நாணயத்தின் பெறுமதியும் அதிகரிக்கும். அதனால் தான் அமெரிக்க டாலருக்கு கேள்வி அதிகம். பொருளாதாரம் வீழ்ந்தால் அந்நாட்டின் நாணய பெறுமதியும் வீழ்ச்சி அடையும். ஆனால் bitcoin எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கி இல்லை. மூன்றாவது, நாணயம் அதற்குரிய நாட்டின் மத்திய வங்கியால் நிர்வாகம் செய்யப்படுவது. ஆனால் Bitcoin மத்திய வங்கி எதற்கும் கட்டுப்பட்டது அல்ல.
Bitcoin ஒரு சொத்தாகவும் கருதப்படலாம். தங்கம் போன்ற சொத்துக்கள் கொண்ட இயல்பும் Bitcoin னுக்கு உள்ளது. தங்கத்தை பரிமாறி கொள்வனவுகள் செய்வதுபோல் bitcoin பரிமாற்றம் மூலமும் கொள்வனவுகள் செய்யப்படலாம். தங்கம் ஒரு நாட்டினதும் கட்டுபாட்டில் இல்லாதது போல் Bitcoin னும் எந்தவொரு நாட்டின் கட்டுபாட்டிலும் இல்லை. ஒரு குறித்த அளவு தங்கம் உலகில் இருப்பதாலேயே அதற்கு கேள்வி அதிகம். அதேபோலவே கணித விதிப்படி மொத்தம் 21 மில்லியன் Bitcoin மட்டுமே உள்ளதால் அதற்கும் கேள்வி அதிகமாக உள்ளது. தங்கத்தை அகழ்ந்து எடுப்பதுபோல் Bitcoin ஐயும் கணனிகள் மூலம் தேடி எடுப்பதால் இச்செயலையும் Bitcoin mining என்பர். கடந்த மாதம் வரை சுமார் 18.875 மில்லியன் Bitcoin கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன (அல்லது கணிதம் மூலம் அறியப்படுகின்றன). மிகுதி Bitcoin கள் 2140ம் ஆண்டு அளவில் அகழப்பட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது.
Bitcoin ஐ ஒரு நாணயமாக அங்கீகரிக்காத நாடுகளும் அதை தங்கம் போல் ஒரு சொத்தாக தற்போதைக்கு கருதுகின்றன. அவ்வாறு கொள்வதன் உள்நோக்கம் அந்த நாட்டவர் Bitcoin ஐ குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்தால், அந்த இலாபத்துக்கு வருமான வரி அறவிடுவதே.
ரூபாயில் ஒரு ரூபா அடிப்படை அலகாக இருப்பது போல் bitcoin அடிப்படை அலகு ஒரு bitcoin. ஒரு bitcoin 8 தசம தானங்கள் வரை பிரிக்கப்படலாம். அதாவது அதன் மிக சிறிய பங்கு 0.00000001 bitcoin. இந்த மிக சிறிய பங்கு Satoshi என அழைக்கப்படும், சாதாரண நாணயத்தின் சதத்துக்கு ஒப்பானது. அதனால் 1 bitcoin = 100,000,000 Satoshis (1 ரூபா = 100 சதம் போல).
தற்போது சந்தையில் Bitcoin ஒன்று சுமார் $50,000 பெறுமதி கொண்டுள்ளது. அனால் 2015ம் ஆண்டு அளவில் இதன் பெறுமதி சுமார் $300 ஆக மட்டுமே இருந்தது. பெரிய அரசுகள் இதை இதுவரை சட்டப்படி ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இதன் பெறுமதி மிகையாக கூடி, குறைந்து தளம்பும். பண கடத்தல், கப்பம் பெறல், போதை பணம் பெறல் போன்ற செயற்பாடுகளில் உள்ளோர் Bitcoin ஐ விரும்புவர். காரணம் Bitcoin ஐ வழங்கியது யார், பெற்றது யார் என்பது எவராலும் அறியப்படாது.
Blockchain என்பது Bitcoin கொடுக்கல், வாங்கலை பதிவு செய்யும் உலகம் எங்கும் உள்ள கணனி இணைப்புகள். உலகின் ஒவ்வொரு Bitcoin பரிமாற்றமும் blockchain இல் பதிவு செய்யப்பட்டு இருக்கும். Bitcoin கொடுக்கல், வாங்கல் பொதுவாக இணையம் மூலமே செய்யப்படும். Blockchain பொய்யான bitcoin பரிமாறலை நிராகரிக்கும். அத்துடன் ஒருவர் ஒரே Bitcoin ஐ பலருக்கு வழங்குவதை தடுக்கும். Blockchain சாதாரண நாணயம் கொண்டிருக்கும் வங்கி பதிவுகளுக்கு அல்லது கணக்கியல் பதிவுகளுக்கு ஒப்பானது.
Bitcoin க்கு பின்னால் இருப்பது நுணுக்கமான கணிதமும், கணிதம் மூலமான செயல் முறைகளுமே (protocol, algorithm). இதை Satoshi Nakamoto என்ற ஒருவர் 2008ம் ஆண்டு white paper ஒன்று மூலம் எழுதி இருந்தார். Satoshi Nakamoto என்பது ஒரு புனை பெயர் என்றே தற்போது கருதப்படுகிறது. அதனால் தற்போது பலரும் தானே Satoshi Nakamoto என்று உரிமை கொண்டாட ஆரம்பித்து உள்ளனர்.
Elliptic Curve Digital Signature Algorithm (ECDSA) என்ற algebraic geometry யே Bitcoin க்கு பின்னால் உள்ள ஆழமான கணிதம். இந்த சமன்பாடும், அது உருவாக்கக்கூடிய இரண்டு வரைபுகளும் மேலேயுள்ள படத்தில் உள்ளன.
Bitcoin ஐ கையாள முனைபவர் முதலில் Bitcoin client என்ற software ஐ தனது கணனியில் download செய்ய வேண்டும். இது Bitcoin பாவனைக்கான Wallet ஐ கொள்ள உதவும். இந்த Wallet மிக தரமான password மூலம் பாதுகாக்கப்படல் அவசியம். இந்த password தொலைக்கப்படால், bitcoin கூடவே தொலைக்கப்படும்.
மேற்படி software உங்கள் Wallet உள்ளே Bitcoin address ஐயும் உருவாக்கும். Bitcoin address மனிதரால் கிரகிப்பட முடியாத ஒன்று. உதாரணமாக ஒரு Bitcoin முகவரி 1Cdid9KFAaatwczBwBttQcwXYCpvK8h7FK ஆக இருக்கும். இதன் உரிமையை கொண்டவரை அரசுகள் உட்பட எவரும் அறிய முடியாது. ஒருவர் இனொருவருடன் Bitcoin பரிமாற்றம் செய்ய தமக்குரிய இந்த முகவரிகளை மட்டுமே பயன்படுத்துவர். மேற்படி முகவரி QR code மூலமும் பரிமாறப்படலாம்.
Bitcoin பரிமாற்றத்தை பிறர் கண்ணில் இருந்து பாதுகாக்க private key, public key என்ற இரண்டு கணித ‘திறப்புகள்’ பயன்படுத்தப்படும். Private key யை பயன்படுத்தி அனுப்பவுள்ள தரவு ஒன்றை மனிதர் வாசிக்க முடியாத எண் தொடராக குழப்பியடிப்பர் (encryption செய்வர்). இந்த குழப்பியடிக்கப்பட்ட தரவை பெறுபவர் அதை அனுப்பியவரின் public key மூலம் குழப்பியடிபில் இருந்து விடுவிப்பார் (decryption செய்வர்). ஒருவர் தனது private key யை ஒளித்து வைத்துக்கொண்டு, public key யை மட்டும் ஏனையோருக்கு வழங்குவர்.
கணனி SHA-256 algorithm மூலம் random ஆக உருவாக்கும் private key 256 binary (அடி-2) bit நீளம் கொண்டது. அல்லது 64 hexadecimal (அடி-16) bit நீளம் கொண்டது. நாம் தினமும் பாவனை செய்யும் அடி-10 ஐ கொண்ட சாதாரண decimal இலக்கத்தில் தானம் ஒன்று 0 முதல் 9 வரையான எண்களை கொண்டிருக்கையில், hexadecimal இலக்கம் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, a, b, c, d, e, f ஆகிய 16 எண்களை கொண்டிருக்கும் (எழுத்து வடிவில் உள்ள a, b, c, d, e, f ஆகியன இங்கு எண்கள் ஆகின்றன). ஒவ்வொரு hexadecimal இலக்கத்தையும் binary இலக்கத்துக்கு மாற்றினால் ஒவ்வொன்றும் 4 binary தானங்களை கொண்டிருக்கும். உதாரணமாக 0 = 0000 ஆகவும் 1 = 0001 ஆகவும் 2 = 00010 ஆகவும், 3 = 0011 ஆகவும் … e = 1110 ஆகவும், f = 1111 ஆகவும் இருக்கும்.
சாதாரண பணம் வழங்கி Bitcoin கொள்வனவு செய்யலாம். Bitcoin ஐ விற்பனை செய்து சாதாரண பணம் பெறலாம். Bitcoin ஐ அனுப்புவதன் மூலம் ஒருவர் இன்னொருவருக்கு பணம் செலுத்தலாம். ஆனால் சில நாடுகள் Bitcoin ஐ இதுவரை சட்டப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. சீனா போன்ற நாடுகள் கடுமையான bitcoin மீது கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.
Bitcoin பரிமாற்ற உதாரணம்: A என்பவர் B என்பவருக்கு Bitcoin அனுப்பும் படிமுறை:
1) A தனது கணனியின் Bitcoin software இல் உள்ள Wallet address இல் இருந்து B இன் Bitcoin Wallet address க்கு தன்னிடம் உள்ள Bitcoin 1 ஐ அனுப்ப நடவடிக்கை எடுப்பார். இவர் அனுப்பவுள்ள செய்தியில் 1) அனுப்புபவரின் Bitcoin முகவரி, 2) பெறுபவரின் Bitcoin முகவரி, 3) அனுப்பப்படும் Bitcoin தொகை, 4) தேவைப்பட்டால் சிறு கட்டணம் (fee) ஆகியன உள்ளடக்கப்பட்டு இருக்கும்.
2) இந்த செய்தியை இணையத்துக்கு அனுப்ப முன், பிறர் இதை வாசிக்க முடியாதவாறு A யின் private key மூலம் encryption செய்யப்படும் (கணித முறையில் குழப்பியடிக்கப்படும்). ஒவொருவரும் தமது private key யை பிறர் கண்ணில் படாது பாதுகாப்பது அவசியம்.
3) Encryption செய்யப்பட்ட செய்தி Blockchain என்ற Bitcoin network க்கு செல்லும். அங்கு A மற்றும் B யின் முகவரிகள், A யிடம் குறைந்தது 1 Bitcoin உள்ளமை ஆகியன உறுதி செய்யப்படும். அதனால் எவரும் எவரையும் பொய் bitcoin வழங்கி ஏமாற்ற முடியாது.
4) உறுதி செய்யப்பட்ட பரிமாற்றம் (transaction) அகழ்வு செய்வோர் கணித algorithm மூலம் செய்யும் Proof of Work க்கு காத்திருக்கும். இதை block validation என்பர். Block கணக்கியல் பதிவுக்கு ஒப்பானது. Blockchain கணக்கியல் புத்தகம் போன்றது. உலகில் இடம்பெற்ற ஒவ்வொரு Bitcoin பரிமாற்றமும் இந்த blockchain பதிவில் இருக்கும். இணையம் உள்ளவரை இந்த பதிவுகள் பகிரங்கத்தில் இருக்கும். இந்த பதிவுகள் பின்னர் எவராலும் மாற்றப்படவோ அல்லது அழிக்கப்படவோ முடியாது. இதற்கு SHA-256 hashing algorithm பயன்படுத்தப்படுகிறது.
5) Proof of Work முடிந்த பின் B தான் பெற்ற Bitcoin ஐ தனது Wallet இல் கொண்டிருப்பர்.
முதலாவது bitcoin பாவனை 2010ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. Laszlo Hanyecz என்பவர் 10,000 bitcoin வழங்கி Papa John’s என்ற pizza கடையில் இருந்து இரண்டு pizza கள் கொள்வனவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த 10,000 bitcoin னின் இன்றைய பெறுமதி சுமார் $100,000,000.