தென் கொரியாவில் குழந்தைக்கு $75,000 சன்மானம்

தென் கொரியாவில் குழந்தைக்கு $75,000 சன்மானம்

தென் கொரியாவின் Booyoung Group என்ற கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்கள் பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் $75,000 சன்மானம் வழங்க முன்வந்துள்ளது. பணம் பெறும் ஊழியர் தாயாக அல்லது தந்தையாக இருக்கலாம். இந்த விபரம் திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021ம் ஆண்டு முதல் திங்கள் வரை அதன் ஊழியர்களுக்கு பிறந்த 70 குழந்தைகளுக்கும் கூடவே $75,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மட்டும் மொத்தம் $5.25 மில்லியன் செலவாகும்.

2022ம் ஆண்டில் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 0.78 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2025ம் ஆண்டில் இது 0.65 ஆக மேலும் குறைவடையும் என்று கணிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் சனத்தொகை மாறாது இருக்க ஒவ்வொரு பெண்ணும் சராசரி 2.1 குழந்தைகளை பெறுதல் அவசியம்.

இவ்வாறே மேற்கு நாடுகளிலும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தாலும் இந்த நாடுகள் குடிவரவு மூலம் சனத்தொகை பெருக்கத்தையும், பொருளாதாரத்தையும் நீடிக்க முனைகின்றன.

சீனாவின் Trip.com என்ற நிறுவனம் அதன் ஊழியர் ஒவ்வொருவரும் பெறும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கும் $1,376 ஆக 5 ஆண்டுகளுக்கு பிறந்தநாள் நன்கொடை வழங்குகிறது.