உலகில் சுமார் 2,700 billionaires உள்ளதாகவும் அவர்களிடம் மொத்தம் $13 டிரில்லியன் ($13,000 பில்லியன்) சொத்துக்கள் உள்ளதாகவும் அவர்கள் குறைந்த அளவு வரியாவது செலுத்தினால் உலக நாடுகள் ஆண்டுக்கு $250 வரிப்பணம் பெறும் என்று கூறுகிறது EU Tax Observatory என்ற ஆய்வு அமைப்பு.
2024 Global Tax Evasion Report என்ற ஆய்வு அறிக்கை தற்போது இந்த உச்ச நிலை செல்வந்தர் ஏறக்குறைய எந்த வரியையும் செலுத்துவதில்லை என்கிறது. இவர்கள் தாம் அல்லது தமது நிறுவனம் அடையும் இலாபங்களை வரி குறைந்த நாடுகளில் ஒளித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்வது தற்போது சட்டத்திற்கு முரணானது அல்ல. புதிய சட்டங்கள் மூலமே இதை தடுத்து, குறைந்த அளவு வரியையாவது இந்த செல்வந்தர்களிடம் இருந்து பெறலாம்.
மறுபுறம் சர்வதேச நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதியதோர் வரி சட்டம் நடைமுறை செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் உலகின் எல்லா நாடுகளும் வர்த்தக நிறுவனங்களுக்கு குறைந்தது 15% வரி அறவிட உள்ளன. அதனால் குறைந்த வரி நாடுகள் என்ற வகை இல்லாது போகும். அத்துடன் வரி குறைந்த நாடுகளில் சர்வதேச நிறுவனங்கள் தமது இலாபத்தை ஒளிப்பது குறையும் அல்லது அற்று போகும்.
2021ம் ஆண்டு 140 நாடுகள் கூடி 2024ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த 15% நிறுவன வருமான வரிக்கு இணங்கி இருந்தன.
இவ்வகை சட்டம் ஒன்றையே உலக billionaires க்கும் நடைமுறை செய்ய வேண்டும் என்கிறது EU Tax Observatory.
அமெரிக்காவில் billionaires சுமார் 0.5% வரியையே செலுத்துகின்றனர். இவர்கள் மொத்த சனத்தொகையில் சுமார் 0.01% மட்டுமே. அதேவேளை சாதாரண மக்கள் 30% அல்லது அதற்கு மேலாக வருமான வரி செலுத்துகின்றனர்.