இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் 41 பேரை கனடாவுக்கு மீண்டும் திரும்ப இந்தியா கட்டளை இட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த 41 பேரும் அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற வேண்டும் என்றும், தவறின் அவர்களின் diplomatic immunity பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது மொத்தம் 62 கனேடிய தூதரக ஊழியர்கள் இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 41 பேர் வெளியேறினால் 21 பேரே தொடர்ந்தும் இந்தியாவில் பணியாற்றுவார். அத்தொகை சாதாரண பணிகளுக்கு போதுமானது அல்ல.
The Financial Times இந்த செய்தியை வெளியிட்டு இருந்தாலும், இந்திய, கனேடிய அதிகாரிகள் இது தொடர்பாக கருத்து கூற மறுத்துள்ளனர்.
நீண்ட காலமாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே முறுகல் நிலை இருந்தாலும், Hardeep Singh Nijjar என்ற சீக்கிய பிரிவினைவாதி கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பின் முறுகல் உக்கிரம் அடைந்துள்ளது. இந்த கொலையில் இந்திய உளவு படையின் கை உள்ளதாக பிரதமர் ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் சுமார் 770,000 சீக்கியர் வாழ்கின்றனர். அத்தொகை கனேடிய சனத்தொகையின் 2% மட்டுமே. ஆனால் கனடாவில் 15 சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர் உள்ளனர் (Liberal 12, Conservative 2, NDP 1). அது 4% பாராளுமன்ற ஆசனங்கள். மாநில, நகர உறுப்பினர் தொகை அதற்கு மேல்.