ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவில் (UNESCO) மீண்டும் இணைய அமெரிக்கா விண்ணப்பித்துள்ளது. தாம் வெளியேறிய பின் சீனாவின் ஆளுமை யுனெஸ்கோவில் அதிகரித்தமையால் அதை தடுக்கவே அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைகிறது என்று கருதப்படுகிறது.
அத்துடன் இதுவரை காலமும் செலுத்த தவறிய அங்கத்துவ கட்டணத்தை செலுத்தும் நோக்கில் யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா $600 மில்லியன் செலுத்தவுள்ளது.
அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைவதை சீனா தடுக்காது என்று சீன அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்கா மீள இணைவதை 193 அங்கத்துவ நாடுகள் வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும்.
2011ம் ஆண்டு யுனெஸ்கோ பலஸ்தீனத்துக்கு அங்கத்துவ உரிமை வழங்கி இருந்தது. அவ்வாறு செய்வது பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் செயல் என்று குற்றம் கூறி ஒபாமா காலத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் யுனெஸ்கோவை சாடி இருந்தன. அத்துடன் அமெரிக்கா யுனெஸ்கோவுக்கு வழங்கும் பணத்தையும் இடை நிறுத்தியது.
2018ம் ஆண்டு ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா யுனெஸ்கோவில் இருந்து முற்றாக வெளியேறியது.