யூக்கிறேன் யுத்தம் தொடர்பான அமெரிக்க புலனாய்வு ஆவணங்களை ரஷ்யா சில தினங்களுக்கு முன் பகிரங்கப்படுத்தி இருந்தது. அப்போது அதை பொய்யான ஆவணங்கள் என்று அமெரிக்கா கூறியிருந்தாலும், தற்போது அவை உண்மையான உளவு ஆவணங்களே என்று அறியப்படுகிறது.
இந்த ஆவணங்கள் பெப்ருவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து மார்ச் மாத ஆரம்பம் வரையான காலத்தில் தயாரிக்கப்பட்டன என்றும் அறியப்படுகிறது. இந்த ஆவணங்களின்படி அமெரிக்கா இஸ்ரேல், தென் கொரியா ஆகிய நட்பு நாடுகளையும், யூக்கிறேன் சனாதிபதி செலென்ஸ்கியையும் உளவு செய்துள்ளது.
யூக்கிறேன் வெற்றி கொள்ளவது கடினம் என்றும், ரஷ்ய-யூகிறேன் யுத்தம் குறைந்தது இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.
பல்கேரியா (Bulgaria) தன்னிடம் உள்ள MiG-29 வகை யுத்த விமானங்களை யூக்கிரேனுக்கு வழங்க முன்வந்தாலும், அவ்வாறு செய்தால் பின் பல்கேரியாவின் வானத்தை பாதுகாக்க அதனிடம் யுத்த விமானங்கள் இராது என்றும் அறியப்பட்டுள்ளது. பல்கேரியாவின் வெற்றிடத்தை நிரப்ப அமெரிக்கா அனுப்பும் F-16 யுத்த விமானங்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்கு பின்னரே பல்கேரியா செல்லும்.
இஸ்ரேலில் தற்போது இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலின் உளவு படையான மொஸாட் முன்னின்று செய்வதாக கசிந்த உளவுகள் கூறுகின்றன. அதை இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது.
அத்துடன் இஸ்ரேல் இரகசியமாக யூக்கிரேனுக்கு ஆயுதங்களை வழங்க முன்வரலாம் என்ற உண்மை பகிரங்கத்துக்கு வந்ததால் இஸ்ரேல் சினம் கொண்டுள்ளது. இஸ்ரேல் ரஷ்யாவை பகைக்க விரும்பவில்லை.
தென்கொரிய ஆயுதங்களை அமெரிக்கா பெற்று பின் யூக்கிரேனுக்கு வழங்கும் அமெரிக்க வேண்டுகோளை தென்கொரிய விரும்பவில்லை என்பதும், பதிலுக்கு தென்கொரியா ஆயுதங்களை போலாந்துக்கு விற்பனை செய்ய, அதை யூக்கிறேன் பெற்றுக்கொள்வதை தென்கொரியா விருப்பியதையும் கசிவு தெரிவித்துள்ளது. இந்த உண்மை பகிரங்கத்து வந்ததால் தென்கொரியா விசனம் கொண்டுள்ளது.
கசிந்த தரவுகளின்படி 189,500 முதல் 223,000 ரஷ்ய படைகளும், 124,500 முதல் 131,000 யூக்கிறேன் படைகளும் இதுவரை பலியாகி அல்லது படுகாயம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இராணுவம் பின்னடைவுகளை அடைந்தாலும், ரஷ்யாவின் உளவுப்படை தொடர்ந்தும் தரமாக செயல்படுகிறது.