Guo Wengui, வயது 52, என்பவர் சீனாவில் ஊழல் செய்த குற்றத்துக்காக விசாரணை செய்யப்பட இருக்கையில் 2014ம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடி அகதியானார். ஆனால் இவர் பின் அமெரிக்காவிலும் $1 பில்லியனுக்கும் மேலான முதலீட்டு திருட்டுக்களை செய்துள்ளதாக கூறி இவரை அமெரிக்காவின் FBI புதன் கைது செய்துள்ளது.
பொதுவாக சீனா போன்ற நாடுகளில் இருந்து ஊழல் வழிகளில் பணம் பெற்றவர்கள் அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளுக்கு பெருமளவு பணத்துடன் செல்லும் போது அந்த நாடுகள் மறுபக்கம் திரும்பி ஊழல் நபர்களை அனுமதிப்பது வளமை. அதில் சிலர் தொடர்ந்தும் செய்த குளறுபடிகளையே செய்கின்றனர்.
Guo அமெரிக்கா சென்றவுடன் சீனா தலைவர்களை பகிரங்கமாக சாடி, சீனா தலைவர்கள் திருட்டுக்களை செய்வதாக கூறி அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். முன்னாள் சனாதிபதி ரம்ப் உட்பட பல அமெரிக்க அரசியல்வாதிகள் Guo வை மேற்கோள்காட்டி சீன எதிர்ப்பு பிரசாரங்கள் செய்துள்ளனர்.
Guo தனக்கு கிடைத்த திடீர் அமெரிக்க ஆதரவை பயன்படுத்தி, தன்னை நம்பிய அமெரிக்கர்களை ஏமாற்றி $1 பில்லியனுக்கும் அதிகமான அளவில் ஊழல் செய்துள்ளார் என்கிறது அமெரிக்க அரசு.
Guo ஊழல் மூலம் பெறப்பட்ட பணத்தில் $37 மில்லியன் பெறுமதியான Lady May என்ற ஆடம்பர படகு, 50,000 சதுர அடி பரப்பு கொண்ட மாளிகை, $3.5 மில்லியன் பெறுமதியான Ferrari கார், $62,000 பெறுமதியான தொலைக்காட்சி, $36,000 பெறுமதியான படுக்கை மெத்தை போன்ற கொள்வனவுகளையும் செய்துள்ளார் என்கிறது FBI.
ரம்பின் ஆலோசகரான Steve Bannon ஊழல் தொடர்பாக 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது Guo வின் படகிலேயே Bannon இருந்துள்ளார்.
அமெரிக்க அரசு ஏற்கனவே Guo வின் $634 மில்லியன் பணத்தை 21 வங்கிகளில் முடக்கி உள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தற்போது “Guo was a serial fraudster” என்று அழைத்துள்ளனர்.