அமெரிக்காவின் Silicon Valley Bank (SVB) கலிபோர்னியா மாநில அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை இழுத்து மூடப்பட்டுள்ளது. அந்த வங்கி அடையவுள்ள பாரிய பண இழப்பில் இருந்து முதலீட்டாளரை பாதுகாக்கும் நோக்கிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது. இந்த வங்கி அமெரிக்காவில் இதுவரை முறிந்த வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாகும் .
இந்த வங்கி வைப்புகள் Federal Deposit Insurance Corporation (FDIC ) மூலம் காப்புறுதி செய்யப்பட்டதால் காப்புறுதி தொகைக்கு உட்பட்ட தொகையை வைப்பு செய்தோர் தமது முழு வைப்பையும் மீள பெறுவார். அத்தொகை தற்போது $250,000 ஆகும். அதற்கும் மேலாக வைப்பை கொண்டிருந்தோர் மேலதிக தொகையை இழக்க நேரிடலாம்.
மற்றைய நாடுகள் போல் அல்லாது அமெரிக்காவில் பல்லாயிரம் வங்கிகள் உண்டு. அவற்றை கண்காணிக்க அரசிடம் போதிய படைப்பலம் இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு FDIC இல் பதிவு செய்த 4,746 வங்கிகள் இருந்துள்ளன.
முதலாவது பெரிய வங்கியான JPMorgan Chase $3,773 பில்லியன் முதலை கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள Bank of America $3,072 பில்லியன் முதலை கொண்டுள்ளது. இன்று முறிந்த SVB $212 பில்லியன் முதலை கொண்டிருந்தது. அமெரிக்காவில் இது 18வது பெரிய வங்கியாகும்.
2008ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற முதலீட்டு குளறுபடிகளுக்கு பல வங்கிகள் பலியாகின. 2009ம் ஆண்டு 25 வங்கிகளும், 2010ம் ஆண்டு 157 வங்கிகளும், 2011ம் ஆண்டு 92 வங்கிகளும், 2012ம் ஆண்டு 51 வங்கிகளும், 2013ம் ஆண்டு 24 வங்கிகளும் 2014ம் ஆண்டு 18 வங்கிகளும் முறிந்திருந்தன.