அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் காலை யூகிரேனுக்கு முன்னறிவிப்பு இன்றிய திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரஷ்யா யூகிரேனை ஆக்கிரமித்த பின் இதுவே பைடெனின் யூகிரேனுக்கான முதல் பயணம்.
பைடெனும், பைடெனுக்கு முன் பல மேற்கு நாடுகளின் தலைவர்களும் யூகிரேன் சென்று படமெடுத்து இருந்தாலும் இந்த பயணங்களால் அங்கு இடம்பெறும் யுத்தத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. ரஷ்யா தான் விரும்பிய வெற்றியை அடையவுமில்லை, யூகிரேன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை விரும்பிய அளவு தடுக்கவுமில்லை.
இந்த யுத்தம் ஆரம்பித்து சுமார் ஒரு ஆண்டு நிறைவுபெறும் நிலையில் சீனாவும், இத்தாலியும் ஒரு சமாதான திட்டத்தை வரும் தினங்களில் முன்வைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பைடெனின் பயணம் இத்தாலி-சீன நகர்வை முறியடிக்கும் நோக்கம் கொண்டதாகவும் அமையலாம்.
ரஷ்யா பெருமளவு படையினரை இழந்து, விரும்பிய வெற்றியை அடையாத நிலையிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் மேற்கு எதிர்பாத்திலும் உரமாக உள்ளது. 2024ம் ஆண்டுக்கான ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி 2.1% ஆக இருக்கும் என்றும், கனடாவில் 1.5% ஆகவும் அமெரிக்காவில் 1.0% ஆகவும் மட்டுமே இருக்கும் என்றும் IMF கூறியுள்ளது. இந்த ஆண்டு ரஷ்யா 0.3% வளர்ச்சியை கொண்டிருக்கும்.
ரஷ்யா மீதான மேற்கின் தடையால் அதிகம் இலாபம் அடைவது சீனாவே.