இந்த மாதம் 6ம் திகதி துருக்கியிலும், சிரியாவிலும் இடம்பெற்ற 7.8 மற்றும் 7.5 அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படுத்திய நில பிளவுகளின் மொத்த நீளம் ஒப்பிட்ட அளவில் சுமார் இலங்கை அளவு நீளமானது என்று California Institute of Technology அறிந்துள்ளது.
சுமார் 300 km நீளம் கொண்ட இந்த இரண்டு பிளவுகளிலும் ஒரு பக்க நிலம் ஒரு திசையில் நகர, அடுத்த பக்கம் எதிர் திசையில் நகர்ந்துள்ளது. சில இடங்களை ஒரு பக்கம் அடுத்த பக்கத்தில் இருந்து 7 மீட்டர் (25 அடி) தூரம் வரை நகர்ந்துள்ளது.
இந்த நடுக்கம் தற்போது 1906ம் ஆண்டு இடம்பெற்ற San Francisco நில நடுக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. துருக்கி, சிரியா நடுக்கத்துக்கு பலியானோர் தொகை தற்போது 45,000 இலும் அதிகமாகியுள்ளது. இதுவரை துருக்கியில் 39,672 உடல்களும், சிரியாவில் 5,800 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பலரின் இருப்பிடம் தற்போதும் அறியப்படவில்லை.
நில நடுக்கத்தின் பின் சுமார் 296 மணித்தியாலத்தில் (12.33 தினங்கள்) ஒரு தந்தையும், தாயும், குழந்தையும் Antakya என்ற இடத்தில் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
படம்: Reuters