அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேலால் அதிக அளவு பறக்கும் பொருட்கள் செல்வதாலும், அவை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பும், வெள்ளை மாளிகையும் பெருமளவில் மௌனமாக இருப்பதாலும் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்க செய்தி சேவைகளும் இந்த விசயம் தொடர்பாக இருட்டிலேயே உள்ளன.
ஞாயிறு மேலும் ஒரு பறக்கும் பொருள் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான Lake Huron மேலாக செல்லும் வேளையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பலூனை மட்டும் சீனாவுக்கு உரியது என்று கூறிய வெள்ளை மாளிகை ஏனைய பறக்கும் பொட்டுகளை யாருக்கு உரியது, இவற்றின் நோக்கம் என்ன என்று கூற முடியாது தவிக்கிறது.
பெரும் செலவில் அமெரிக்கா தனது வானத்தை கண்காணிகையில் எவ்வாறு இவ்வகை பொருட்கள் கண்ணுக்கு அகப்படாமல் உள்ளன என்றும் கேட்கப்படுகிறது.
மிக வேகமாக செல்லும், அளவில் பெரிய யுத்த விமானங்கள், ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்க தயாரித்த ரேடார் அமைப்புகள் மெல்ல செல்லும் சிறிய பொருட்களை காண தவறி இருக்கலாம். அமெரிக்கா தற்போது தனது ரேடார் அமைப்பை வேகமாக மாற்றி அமைக்கிறது.
அமெரிக்க, கனேடிய வான்பரப்பை கண்காணிக்கும் NORAD என்ற இராணுவ கட்டமைப்பும் இது தொடர்பாக பெருமளவில் மௌனம் சாதிக்கிறது. அதுவும் flying object, small object, unidentified object போன்ற புரியாத கருத்துக்கள் கொண்ட சொற்களாலேயே மேற்படி பொருட்களை விபரிக்கின்றது.