2035ம் ஆண்டளவில் சீனாவின் GDP (Gross Domestic Product) அமெரிக்காவின் GDP யை பின் தள்ளி சீன பொருளாதாரம் உலகின் முதலாவது பொருளாதாரம் ஆகும் என்று கூறுகிறது Goldman Sachs என்ற அமெரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி.
Goldman Sachs நிறுவனத்தின் இன்றைய கணிப்பு அது 2011ம் ஆண்டு வெளியிட்ட சீனாவின் வளர்ச்சி கணிப்பை சுமார் 10 ஆண்டுகள் பின்தள்ளி உள்ளது என்றாலும் Covid தாக்கம், யூகிறேன் யுத்தம், சீனா மீதான அமெரிக்காவின் தடைகள் ஆகியன 2011ம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
2000ம் ஆண்டில் சீனாவின் GDP அமெரிக்காவின் GDPயின் 12% அளவில் இருந்தது. ஆனால் இன்று அது சுமார் 80% ஆக வளர்ந்து உள்ளது. மிகுதி 20% ஐ சீனா அடுத்த 10 ஆண்டுகளில் அடையும் என்பதே Goldman வங்கியின் கணிப்பு.
2024ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை சீனாவின் GDP வளர்ச்சி ஆண்டுக்கு 4% ஆக இருக்கும் என்றும், அதே காலத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி சுமார் 1.9% ஆக இருக்கும் என்றும் Goldman கூறியுள்ளது.
அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் தனிமனித பொருளாதாரத்தை 2035ம் ஆண்டு அளவில் ஆண்டுக்கு $20,000 ஆக உயர்த்த தீர்மானித்து உள்ளது.
சீனாவின் வளர்ச்சிக்கு பாதகமாக சீனாவின் பிறப்பு வீழ்ச்சி அமையும். இது பொதுவாக அனைத்து வளர்ச்சி அடைந்த நாடுகளும் எதிர்கொள்ளும் குறைபாடு.
Goldman கணிப்பின்படி 2050ம் ஆண்டு அளவில் உலகின் மிக பெரிய 5 பொருளாதாரங்களாக முறையே சீனா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் விளங்கும்.