சீனாவின் முன்னாள் சனாதிபதி Jiang Zemin இன்று புதன்கிழமை தனது 96 ஆவது வயதில் காலமானார். இவர் 1993 முதல் 2003 வரை சீனாவின் 5ஆவது சனாதிபதியாக பதவி வகித்தவர்.
இவரின் ஆட்சியில் சீனா பல முன்னேற்ற நகர்வுகளை செய்திருந்தது. 1997ம், 1998ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகள் பொருளாதார முடக்கத்தில் இருந்தாலும், சீன பொருளாதாரம் வளர்ச்சியை கண்டிருந்தது. இவரின் ஆட்சியிலேயே சீனா World Trade Organization உறுப்பினர் நாடு ஆனது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிகழ்த்தும் உரிமையும் இவரின் ஆட்சியிலேயே பெறப்பட்டது.
பிரித்தானியாவும், சுமார் 150 ஆண்டுகால ஆட்சியின் பின், 1997ம் ஆண்டு, இவரின் ஆட்சி காலத்திலேயே ஹாங் காங் நகரை சீனாவிடம் கையளித்து. ஆனாலும் இந்த தீர்மானம் அதற்கு முன், 1984ம் ஆண்டில், Deng Xiaoping காலத்திலேயே முற்றாகி இருந்தது.
சோவியத்தில் கல்வி கற்றாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இவரே முதலில் முதலாளித்துவ உறுப்பினர்களை அங்கம் வகிக்க வசதி செய்தவர். சீன பொருளாதாரம் உலக அளவில் வளர இச்செயல் மேலும் உதவியது.
நியூ யார்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதலுக்கு பின் இவர் தானாக முன்வந்து அமெரிக்காவுக்கு உதவிகளை செய்தவர்.