Ukraine முரண்பாடுகள் ஆரம்பமாகுமுன், 2011 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அரசு ரஷ்யாவுக்கு இரு பாரிய Mistral வகை யுத்த கப்பல்களை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த இரு கப்பல்களினதும் மொத்த பெறுமதி $1.66 பில்லியன். அத்துடன் மேலும் இரு கப்பல்களையும் ரஷ்யா கொள்வனவு செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தது.
ஆனால் அமெரிக்கா இவ்வகை நவீன கப்பல்கள் ரஷ்யாவிடம் போவதை முதலில் இருந்தே விரும்பி இருந்திருக்கவில்லை. ரஷ்யா கிரைமியாவை தன்வசப்படுத்தியபின் அமெரிக்காவின் எதிர்ப்பு மேலும் பலப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் தனது பொருளாதார நலன்கள் கருதி விற்பனையை தொடர விரும்புகிறது.
பதிலாக அமெரிக்கா தற்போது ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. அதாவது இந்த இரு கப்பல்களையும் NATO கொள்வனவு செய்யலாம் என்றுள்ளது. ஆனால் NATOவிடம் பணம் இல்லை.
ரஷ்யாவுக்கான விற்பனை தொடருமாயின், முதலாவது கப்பல் இந்த வருட இறுதிக்குள் ரஷ்யாவிடம் கையளிக்கப்படும்.
நவீன தொழில்நுட்பங்களை கொண்ட இந்த கப்பல்களில் 16 ஹெலிகள், 4 கடற்கரையில் இறங்கும் கப்பல்கள் (landing craft), 60 கவச வாகங்கள், 13 தாங்கிகள் (tank) உட்பட 700 இராணுவத்தினரை எடுத்து செல்லலாம்.