இன்று உலக சனத்தொகை 8 பில்லியன்

இன்று உலக சனத்தொகை 8 பில்லியன்

இன்று செவ்வாய்க்கிழமை உலக சனத்தொகை 8 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. இது ஒரு அண்ணளவான கணிப்பீடே. தற்காலங்களில் சனத்தொகை பெருக்கம் அதிக அளவில் நைஜீரியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது.

நைஜீரியாவின் தற்போதைய 216 மில்லியன் சனத்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 375 மில்லியன் ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நைஜீரியா நாலாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடாகும்.

நைஜீரியா, Congo, எத்தியோப்பியா, தன்சனியா ஆகிய நாடுகள் உட்பட 8 ஆபிரிக்க நாடுகள் 2050ம் ஆண்டு வரையான காலத்தில் உலகின் 50% சனத்தொகை வளர்ச்சிக்கு காரணமாகும் என்றும் கூறப்படுகிறது. இங்கே தாய் ஒன்று சராசரியாக 4.6 குழந்தைகளை கொண்டுள்ளார், உலக சராசரி 2.3 மட்டுமே.

மேற்படி நாடுகளில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு தேவையான பாடசாலை, சுகாதார, உணவு, போக்குவரத்துக்கு வசதிகள் இல்லை.

தற்போது 333 மில்லியன் சனத்தொகையை கொண்ட அமெரிக்காவில் சனத்தொகை வளர்ச்சி வீதம் 0.1% மட்டுமே. இந்திய சனத்தொகை விரைவில் சீனாவை பின் தள்ளும்.

ஐ.நா. கணிப்பின்படி உலக சனத்தொகை 2030ம் ஆண்டில் 8.5 பில்லியன் ஆகவும், 2050ம் ஆண்டில் 9.7 பில்லியன் ஆகவும், 2100ம் ஆண்டில் 10.4 பில்லியன் ஆகவும் இருக்கும்.