பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வயது 70, அவரை படுகொலை செய்யும் நோக்கில் சுடப்பட்டதால் காலில் காயமடைந்து உள்ளார். இன்று வியாழன் லாகூர் நகருக்கு அண்மையில் அவர் தனது ஆதரவாளருடன் ஊர்வலம் ஒன்றை நிகழ்த்துகையிலேயே சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த அரச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்த Faisal Javed போன்ற மேலும் சிலரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி போலீசார் கூறுகின்றனர், ஆனால் போலீசார் விபரம் எதையும் வெளியிடவில்லை.
துப்பாக்கி தாக்குதலை செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த நபரின் தரவுகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் கூட்டணி கட்சி ஒன்று தனது ஆதரவை பின்வாங்கியதே காரணம். அமெரிக்காவே பின்னணியில் இருந்து தன்னை விரட்டியதாக இம்ரான் கூறியுள்ளார். அமெரிக்கா அதை மறுக்கிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பெனாசீர் பூட்டோ 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.