ஈரானின் அணு ஆய்வுகள் நிறுத்தப்படல் அவசியம் என்று மேற்கு நாடுகள் அனைத்தும் முழங்குகின்றன. ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை என்றும் கூறப்படடாலும் இந்த நாடுகள் அணு ஆய்வை காரணம் கூறி ஈரான் மீது பல தடைகளையும் திணித்துள்ளன. அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது வசைபாடி வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஐ. நாவில் இஸ்ரேல் அதன் அணு ஆயுதங்களை கைவிடல் அவசியம் என்று கூறும் தீர்மானம் ஒன்று பொது சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அணு ஆயுதம் அற்ற மத்திய கிழக்குக்கு இந்த இஸ்ரேலின் அணு ஆயுதங்களை களைதல் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, Palau, Micronesia ஆகிய 5 நாடுகள் மேற்படி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து உள்ளன. கனடாவின் வாக்களிப்பு அது பறைசாற்றும் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. மற்றைய நாடுகளை திருந்த முன் நிற்கும் கனடா தன்னை திருத்த பின் நிற்கிறது.
அது மட்டுமன்றி அஸ்ரேலியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, பிரித்தானியா ஆகிய பிரதான மேற்கு நாடுகள் உட்பட 24 நாடுகள் தீர்மானத்தில் வாக்களியாது இருந்துள்ளன.
சீனா, பங்களாதேஷ், பின்லாந்து, ஜப்பான், நேபாள், நியூ சிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, ஆகிய நாடுகள் உட்பட 152 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளன.
ஐ. நாவின் பொது சபை தீர்மானங்கள் பொதுவாக பயனற்றவை.