தமது எரிபொருள் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பரல்களால் குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளான OPEC (Organization of the Petroleum Exporting Countries) இன்று புதன் அறிவித்துள்ளது. இந்த குறைப்பு தற்போதைய உற்பத்தியின் 2% ஆகும். இந்த தீர்மானத்தால் கவலை கொண்டுள்ளன அமெரிக்காவும், மேற்கு நாடுகளும்.
இந்த உற்பத்தி குறைப்பு நீடித்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.
OPEC உற்பத்தி குறைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது மேற்கு நாடுகளே. ரஷ்யா யுக்கிரைனுள் நுழைந்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை தவிர்த்து அல்லது பெருமளவில் குறைத்து உள்ளன. தாம் இழந்த ரஷ்ய எரிபொருளுக்கு மாற்றீடாக மத்திய கிழக்கு எரிபொருளையே மேற்கு நம்பி உள்ளது.
சீனா மற்றும் பல ஆசிய நாடுகள் தொடர்ந்தும் குறைந்த விலையில் ரஷ்ய எரிபொருளை கொள்வனவு செய்கின்றன.
அரசியல் காரணங்களுக்காக ஈரான், வெனிசுவெல ஆகிய நாடுகளின் எண்ணெய் மீது அமெரிக்கா தடைகளை கொண்டுள்ளதும் தற்போது அமெரிக்காவை பாதிக்கிறது.
சில மாதங்களுக்கு முன் ஒரு பரல் எண்ணெயின் விலை சுமார் $120.00 ஆக இருந்திருந்தாலும், தற்போது பரல் ஒன்று சுமார் $90.00 ஆகவே உள்ளது.