IT சேவைகள் மூலம் உலகில் அதிக வருமானம் பெறும் நாடாக இந்தியா உள்ளது. 2021-2022 வர்த்தக ஆண்டில் இந்தியா $150 பில்லியன் வெளிநாட்டு வருமானத்தை பெற்று உள்ளது என்கிறது Reserve Bank of India (RBI).
இந்தியாவிடம் இருந்து IT சேவைகளை பெற்ற நாடுகளில் அமெரிக்கா முதலாம் இடத்தில் உள்ளது. கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் மொத்தம் $86.9 பில்லியன் பெறுமதியான IT சேவையை இந்தியாவிடம் இருந்து பெற்று உள்ளன. அது இந்தியாவின் மொத்த IT சேவை வருமானத்தின் 55.5% பங்கு.
ஐரோப்பா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஐரோப்பா இந்தியாவிடம் இருந்து $48.6 பில்லியன் பெறுமதியான சேவைகளை பெற்று உள்ளது. அதில் $23.3 பில்லியன் பிரித்தானியாவில் இருந்து பெறப்பட்டு உள்ளது.
பிரித்தானிய இந்தியாவை ஆண்டமை இந்தியா ஆங்கில அறிவை பெற காரணமாக இருந்தது. அது அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கில நாடுகளுக்கு இந்தியா இலகுவில் சேவையை வழங்க வசதி செய்தது. அத்துடன் இந்தியாவில் IT ஊழியர் ஒருவரின் ஆண்டு ஊதியம் சுமார் $11,140 ஆகவே மட்டுமே உள்ளது.
IT சேவையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் ஆங்கில அறிவு நீண்ட காலமாக குறைவாகவே இருந்தது. சீனாவில் IT ஊழியர்கள் $27,700 முதல் $52,300 வரையான ஊதியம் பெறுகின்றனர்.