முதல் முறையாக இந்தியா உள்ளூரில் வடிவமைத்து கட்டிய விமானம் தாங்கி கப்பல் INS (Indian Naval Ship) Vikrant வெள்ளிக்கிழமை கையளிப்பு (commission) செய்யப்படுகிறது. சுமார் 262 மீட்டர் நீளம் கொண்ட இது 45,000 தொன் மொத்த எடையை கொண்டிருக்கும். இதில் 30 யுத்த விமானங்கள் அல்லது ஹெலிகள் நிலைகொள்ளும்.
இந்தியாவின் முதல் விமானம் தாங்கியும் Vikrant என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட அந்த விமானம் தாங்கி 1961 முதல் 1997 வரை சேவையில் இருந்தது. அதன் பெயரே தற்போது இந்த புதிய விமானம் தாங்கிக்கு சூட்டப்படுகிறது.
தற்போது INS Vikramaditya என்ற விமானம் தாங்கியும் சேவையில் உள்ளதால் INS Vikrant இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் ஆகிறது. புதிய கப்பலில் 196 அதிகாரிகளும், 1,449 படையினரும் தங்குவர்.
முதலில் இதற்கு $0.5 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் 2020ம் ஆண்டில் இதன் செலவு $3.13 பில்லியன் ஆக அதிகரித்து இருந்தது. அத்துடன் 2017ம் ஆண்டு கையளிக்கப்பட இருந்த இது தற்போதே கையளிக்கப்படுகிறது.
இந்த விமானம் தாங்கி சேவைக்கு வந்தாலும் இதில் பயன்படுத்த தகுந்த யுத்த விமானங்கள் இந்தியாவிடம் தற்போது இல்லை. கையளிப்பு நேரத்தில் ஒரு ரஷ்ய MiG-29K வகை யுத்த விமானமும், ஒரு ரஷ்ய Kamov-31 வகை ஹெலியும் மட்டுமே இருக்கும். அதனால் இந்த கப்பல் யுத்தத்துக்கு தயாராக மேலும் பல ஆண்டுகள் தேவைப்படும்.