தனது இரண்டாவது விசா காலமும் முடிவடைந்த நிலையில் முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாய வியாழன் சிங்கப்பூரை விட்டு வெளியேறி உள்ளார் என்று சிங்கப்பூர் Immigration & Checkpoints Authority கூறியுள்ளது . இவர் தற்போது எங்கு செல்கிறார் என்று கூறாவிட்டாலும், தாய்லாந்து செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது.
கோட்டபாய தாய்லாந்து செல்வதற்கு உரிமையை ஏற்கனவே கேட்டு இருந்ததாகவும் அந்த உரிமை வழங்கப்பட்டு இருந்ததாகவும் தாய்லாந்து பிரதமர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தாய்லாந்தில் அவர் 90 தினங்கள் தங்க உரிமை வழங்கப்படுகிறது.
ஆனாலும் கோட்டபாய தொடர்ந்தும் தாய்லாந்தில் வாசிக்காது மீண்டும் சிங்கப்பூர் திரும்பலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஜூலை மாதம் 13ம் திகதி இலங்கையை விட்டு தப்பி ஓடிய கோத்தபாய முதலில் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு சென்று, அங்கிருந்து சவுதி விமானத்தில் சிங்கப்பூர் சென்று இருந்தார். சிங்கப்பூர் இவருக்கு இரண்டு தடவைகள் 14 தின விசா வழங்கி இருந்தது. அங்கு இவரின் மூன்றாம் விசா விண்ணப்பம் புதன்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சனாதிபதி பதவியை விட்டு விலகி ஒரு சாதாரண நபராக நாடு விட்டு நாடு பயணிக்கும் கோட்டபாய எவ்வாறு தொடர்ந்தும் இலங்கையின் diplomatic கடவுச்சீட்டை கொண்டிருக்க முடியும் என்று இலங்கையின் ரணில் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.