இந்தோனேசியாவின் உல்லாச பயணிகள் அதிகம் விரும்பும் பாலி (Bali) நகரில் இருந்து அஸ்ரேலியாவின் டார்வின் (Darwin) விமான நிலையம் சென்ற நபருக்கு அவர் தன்னிடம் இருந்த Muffin உணவை தெரிவிக்காத காரணத்தால் A$ 2,664 (U$ 1,874) தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் Foot and Mouth நோய் பாலி நகரம் உட்பட இந்தோனேசியாவின் பல பாகங்களில் பரவுவதால் அஸ்ரேலியா தனது நாட்டுக்குள் வரும் உணவுகள் மீது கடும் எச்சரிக்கையாக உள்ளது. டார்வின் விமான நிலையத்தில் சேவையில் இருந்த Zinta என்ற மோப்ப நாயே மேற்படி உணவை கண்டெடுத்து உள்ளது.
Foot and Mouth நோய் (FMD) மிருக பண்ணைகள் மூலம் பரவுவது. அதனாலேயே பல நாடுகள் நாடு திரும்பும் பயணிகளை பண்ணைகளுக்கு சென்று இருந்தீர்களா என்று கேட்பது. உயிர் மிருகம், இறைச்சி, பால் உணவு, உடுப்பு, காலனி எல்லாவற்றாலும் இந்த நோய் பரவலாம்.
சில விமான நிலையங்கள் இந்தோனேசியாவில் இருந்து வரும் பயணிகளை citric அமில கொண்ட கால் துடைப்பு மீது நடந்துவர கூறுகின்றன. இவ்வாறு செய்வது FMD நோய் பரவுவதை தடுக்கிறது.
இந்த நோய் மனிதருக்கு பெரும் பாதகம் அல்ல என்றாலும் கால்நடைகளுக்கு இது மிக ஆபத்தானது. இந்த நோய் மாடு, ஆடு, பன்றி போன்ற மிருகங்களின் நாக்கை பாதிப்பதால் அந்த மிருகங்கள் உணவு உண்பதை தவிர்க்கின்றன.
மேற்படி தண்டம் அந்த விமான பயண சீட்டின் விலையின் இரண்டு மடங்கு என்று கூறப்படுகிறது.