யுக்ரைன் தானியத்தை ஏற்றுமதி செய்ய இணக்கம்

யுக்ரைன் தானியத்தை ஏற்றுமதி செய்ய இணக்கம்

உலகுக்கு கோதுமை போன்ற தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் யுக்ரைன் பிரதானம். ரஷ்யா யுக்ரைனை ஆக்கிரமித்த பின் யுக்ரைனின் கருங்கடல் மூலமான தானிய ஏற்றுமதி முற்றாக தடைபட்டு இருந்தது. தற்போது துருக்கி, ரஷ்யா, யுக்ரைன் ஆகிய நாடுகள் ஐ.நாவுடன் இணைந்து யுக்ரைனின் தானியத்தை கருங்கடல் மூலம் ஏற்றுமதி செய்ய இணக்கம் ஒன்றில் வெள்ளி கையொப்பம் இடவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

அண்மையில் ஈரான் சென்ற துருக்கியின் சனாதிபதி அங்கு ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்தித்து உரையாடி இருந்தார். அந்த உரையாடலில் யுக்ரைனின் தானிய ஏற்றுமதி இணக்கமும் ஏற்பட்டு இருக்கலாம்.

யுத்தம் காரணமாக யுக்ரைனின் துறைமுகமான ஒடேசாவில் (Odessa) மட்டும் சுமார் 20 மில்லியன் தொன் தானியங்கள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த துறைமுகத்தில் பல தானிய கப்பல்களும் கூடவே முடங்கி உள்ளன.

இந்த இணக்கப்படி தானிய கப்பல்கள் ஆயுதங்களை கடத்துவதை தவிர்க்க துருக்கி அந்த கப்பல்களை சோதனை இடும். இந்த கப்பல்கள் கருங்கடலில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் செல்லும் Bosporus கால்வாய் மூலமே வெளி உலகை அடையும்.

இந்த கையொப்பம் இடல் வெள்ளி இஸ்தான்புல் நகரில் இடம்பெறலாம். ஆனாலும் ரஷ்யாவோ, யுக்ரைனோ இதுவரை இந்த இணக்கம் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட்டு இருக்கவில்லை.