சிக்காகோவில் 7 பேரை சுட்டவனின் கவலைக்குரிய குடும்பம்

சிக்காகோவில் 7 பேரை சுட்டவனின் கவலைக்குரிய குடும்பம்

ஜூலை 4ம் திகதி, அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, சிக்காகோ (Chicago) சுதந்திர தின ஊர்வலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 7 பேர் பலியாகியும், 10 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். அந்த துப்பாக்கி சூட்டை செய்த பாபி (Bobby என்று அழைக்கப்படும் Robert Crimo III) என்பவனின் குடும்ப இடர்கள் தற்போது வெளிவந்துள்ளன.

பாபியின் தாயும், தந்தையும் நீண்ட காலமாக முரண்பாட்டில் இருந்துள்ளனர். தந்தை பொருளாதார நெருக்கடியிலும் இருந்துள்ளார். பெற்றோரின் முரண்பாடுகள் காரணமாக பல தடவைகள் போலீசார் அவர்களின் வீட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனாலும் வழக்குகள் எதுவும் பதியப்பட்டு இருக்கவில்லை.

குடும்ப சண்டையால் விசனம் கொண்ட 18 வயது பாபி 2019ம் ஆண்டு வீட்டில் உள்ளோரை கொலை செய்யப்போவதாக மிரட்டியபோது போலீசார் வீட்டில் இருந்த 16 கத்திகளை அபகரித்து இருந்தனர். பின்னர் அவனின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

தந்தை முதலில் White Hen Pantry என்ற chain உணவகத்தை இயக்கி இருந்தார். அதை 7-Eleven கொள்வனவு செய்த பின் Bob’s Pantry & Deli என்ற சொந்த உணவகத்தை தந்தை இயக்கி வந்திருந்தார். ஆனாலும் அவர் கடனில் மூழ்கி இருந்தார்.

தந்தையின் உணவகத்தில் தாயும், தந்தையும் வாடிக்கையாளர் முன் பல தடவைகள் வாய் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சண்டை சுமார் 6 ஆண்டு காலம் நீடித்து உள்ளது. பின்னர் பாபியின் தாய் இவர்களின் வீட்டிலும், தந்தை தனது தகப்பனாருடனும் வாழ்ந்துள்ளனர்.

தந்தையின் உணவகம் $764,000 கடனில் உள்ளதாக கூறப்படுகிறது. கடன் காரணமாக அது மூடப்பட்டு உள்ளது. இவர்களின் ஒரு வீடு $460,000 கடன் காரணமாக HSBC வங்கியினால் பறிக்கப்பட இருந்தது. அவர்களின் இரண்டாவது வீடு $197,000 கடன் காரணமாக கடன் வழங்கிய NewRez என்ற நிறுவனத்தால் பறிக்கப்பட இருந்தது.

பாபியுடன் பாடசாலையில் படித்தவர்கள் அவன் கல்வியில் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்றுள்ளனர். ஏனைய மாணவருடன் பழகுவதையும் அவன் தவிர்த்து உள்ளான். பாபி வன்முறைகள் கொண்ட வீடியோக்களை இணையத்தில் பதிவும் செய்துள்ளான்.