கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்தில் எந்த ஒரு தரப்பும் வெற்றி கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் இருவர் கூறியுள்ளனர். அத்துடன் யுத்தத்தை நீண்ட காலம் இழுத்தடித்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளை பொருளாதாரத்தில் நலிவடைய செய்வதே பூட்டினின் நோக்கம் என்றும் அந்த உளவாளி அதிகாரிகள் கூறி உள்ளனர்.
அமெரிக்காவின் National Intelligence Director Avril Haines, மற்றும் Defense Intelligence Agency Director Scott Barrier ஆகிய இருவருமே இந்த கணிப்பை அமெரிக்காவின் Senate armed services என்ற அவைக்கு இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.
யுக்ரைன் சண்டை நீண்ட காலம் தொடர்ந்தால் மேற்கு நாடுகளில் எரிபொருள், உணவு தட்டுப்பாடுகள் ஏற்பட்டு, விலைவாசி அதிகரித்து பொருளாதாரம் மந்தமடையும் என்பதே பூட்டினின் எண்ணம் என்கின்றனர் மேற்படி அமெரிக்க அதிகாரிகள்.
அந்நிலை ஏற்கனவே மேற்கு நாடுகளில் இடம்பெறுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள், உணவு விலைகள் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளன.
அத்துடன் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தொடர்ந்தும் பண, ஆயுத உதவிகளை யூகிரேனுக்கு செய்ய முடியாது என்பதுவும் பூட்டினின் கணிப்பு என்று கருதப்படுகிறது.
இந்த உண்மையை அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக கூறுவதை சிலர் விரும்பவில்லை என்றாலும் அமெரிக்க மக்கள் உண்மையை அறியவேண்டும் என்பதாலேயே இந்த உண்மை பகிரங்கத்துக்கு வந்துள்ளது.