ஐயோ!
இளவழகன்
(இந்த சிறுகதை 1993:03:19 அன்று தாயகம் பிரதியில் வெளிவந்தது)
”ஐயோ… என்ரை மகனை ஒண்டும் செய்யாதையுங்கோ. என்ரை ராசாக்கள் மகனை விடுங்கோடா. அப்பு… துரை… என்ரை மகனை விடுகங்கோடா. அவனை ஒண்டும் செய்யாதையுங்கோ பிள்ளையள். உங்களை கும்புடுகிறன் மகனை சித்திரவதை செய்யாதையுங்கோ.
“உள்ளுக்குள் ஐயோ… ஐயோ… எண்டு சத்தம் கேட்குது. சன்னதியானே… நல்லுரானே… என்ரை மகனை காப்பாத்து. வல்லிபுரத்தானே என்ரை மகனை காப்பாத்து. ஐயோ கடவுளே என்ரை மகனை காப்பாத்து. ராசாக்கள் என்ரை மகனை விடுங்கோனை. உங்கடை காலிலை விழுந்து கெஞ்சிக்கேட்கிறான் என்ரை மகனை விடுங்கோ.”
“ஐயோ புத்தரே… ஜேசுவே… அல்லாவே… என்ரை மகனை காப்பாற்று. அவனுக்கு ஒன்றும் நடக்கக்கூடாது. அவன் இனி இந்த ஊரிலை இனி இருக்கமாட்டான்.”
“ஐயோ… என்ரை மகன் அழுது கேட்குது. அப்பு நான் இங்கை இருக்கிறணனை. நான் கூப்பிடுறது கேட்குதேனே? தம்பி பொறுப்பாளர் என்ரை மகனை விடுங்கோனை. ஐயோ திரும்பவும் குளறிக்கேட்குது. ஐயோ என்ரை மகனை கொல்லுறாங்கள், யாராவது வந்து காப்பாத்துங்கோ.”
“பிள்ளையள் எனக்கு வேணுமெண்டால் அடியுங்கோ, அவனை அடியாதையுங்கோ. கடவுளே நான் மலடியாய் இருந்திருக்கலாம்.”
“எவ்வளவு அருமையானவன் தம்பி. நீயும் என்ரை பிள்ளையோடை தானே திரியிறனி. நீயும் அவன் போன இயக்கத்துக்கு தானே போக இருந்தனி. பிறகுதானே இந்த இயக்கத்துக்கு போனனி. துரை… நான் கதைக்கிறன் ஏனனை நீ கேட்காத மாதிரி போறாய்? நீ முந்தி கண்டால் சிரிச்சு நாள் முழுக்க கதைப்பாய். வீட்டையெல்லாம் வந்து விளையாடுவாய்… இப்ப என்னனை தெரியாத மாதிரி போறாய்?”
“ஐயா துரை, நீ துவக்கோடை அவன் இருக்கிற பக்கம் போகாதை. அம்மாளே என்ரை மகனை சுடப்போகினம்… காப்பாத்து.”
“துரைமார் நான் கிடக்கிறது எல்லாத்தையும் உங்கடை பெயருக்கு எழுதிப்போட்டு நாங்கள் குடும்பத்தோடை எங்காவது ஓடிப்போறம், என்ரை மகனை விடுங்கோ.”
“ஐயோ, படிக்கிற பள்ளிகூடத்திலை வைத்து கொல்லுகினமே. அப்பு ராசா ஊர் அலுவல்கள் வேண்டாம் எண்டவன் எல்லாம் வெளிநாட்டிலை சொகுசாய் இருக்க ஊர் அலுவல் பார்த்த நீதானே சகோதரங்களிட்டை அடிவாங்கி சாகிறாய். நான் உன்னை கேட்டனான் சவுதிக்கு எண்டாலும் போவன் எண்டு, நீதானே மறுத்து கண்டறியாத மண் எண்டு ஊர் அலுவல் பார்த்தாய். இப்ப எங்கை அந்த ஊர்? நீ கப்பலுக்காவது போயிருக்கலாம், நானும் நிம்மதியாய் இருந்திருப்பன்.”
“ஐயோ, என்ரை கோயில் முனகிக்கேட்குது. இனியெண்டாலும் அவனை விடுங்கோ. அவன்ரை உயிரை எடுக்கதையுங்கோ. நான் கிடக்கிறது எல்லாத்தையும் வித்தாவது அவனை வெளிநாடு எங்காவது அனுப்பிறன். இந்த முதல் தடவை மட்டும் விடுங்கோ. ஐயோ, என்ற அப்பு குளறி கேட்குது. அப்பு… ராசா… நான் என்டடா செய்வன், இவங்கள் என்னை உள்ளை வர விடுறாங்கள் இல்லை. உன்னை பூட்டி வைச்சல்லே அடிக்கிறாங்கள்.”
“ஊருக்கு ஏதாவது செய்துபோட்டு வீடுக்கு செய்யிறன் எண்டு சொன்னாய் இப்ப என்கையனை ஊர் போட்டுது? சன்னதியிலை பெத்தம்மா கிளி சீட்டு இழுத்தது போல ஒண்டுக்கு போனால் இப்ப இன்னொண்டு உன்னை கொல்லுது. எல்லாரும் எங்கை போறம் எண்டு தெரிஞ்சே போனவை?”
“ஐயோ, என்ரை மகன் தண்ணீ… தண்ணீ… எண்டு கத்திறான். துரைமார் அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கோ.”
“இங்கை எங்கடை செல்வம் வருகுது. தம்பி செல்வம், நீ பேப்பருக்கு ஆசிரியன் அல்லே, நீ சொன்னால் கேட்பினம். தம்பி சொல்லு அவனை விடச்சொல்லி, நான் உன்ரை காலை பிடிச்சு கேட்கிறன்… நீ ஏனனை உதறிப்போட்டு போறாய்? தம்பி நீயும் கம்பசுக்கு போனளவு படிச்சனியல்லே ஏனனை இப்படியெல்லம் செய்யிறியள்?”
“ஐயோ, செல்வம் நீ உன்ரை அலுவல் முடிஞ்ச உடனை போறியே? நீயென்ன நாளைக்கு ஐம்பது ஆமி பலி எண்டே உன்ரை பேப்பரிலை எழுதப்போகிறாய்? நீங்கள் எல்லாம் செத்த வீட்டுக்கு தாரை தப்பட்டை அடிக்கத்தான் தோது!”
“ஐயோ, யாரையோ தூக்கி வாறாங்கள். ஐயோ… ராசா உன்னை கொண்டு போட்டாங்களே.”