தற்போது உக்கிர முறுகல் நிலையில் உள்ள யுக்கிரைன் விசயத்தில் இந்தியா மீண்டும் அணிசாரா கொள்கையை கடைப்பிடிக்க முயல்கிறது. ஆனால் அந்த கொள்கை எவ்வளவுக்கு பயனளிக்கும் என்பது இந்தியாவுக்கே தெரியாது.
யுக்கிரைன் விசயத்தில் இந்தியா பழைய நண்பனான ரஷ்யாவையும், புதிய நண்பனான அமெரிக்காவையும் பகைக்காமல் இருக்கும் நோக்கிலேயே ஆழமான கருத்து எதையும் கூறாமல் மௌனம் சாதிக்கிறது. ஆனாலும் மேற்கு இந்தியா ரஷ்யாவை கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. குறிப்பாக யுக்கிரைன் வெளியுறவு அமைச்சர் Kuleba இந்தியா ரஷ்யாவின் செய்கைகளை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
யுக்கிரைன் முறுகல் பெரும் யுத்தமாக மாறினால் இந்தியா அமெரிக்கா பக்கம் அல்லது ரஷ்யா பக்கம் சாய வேண்டி இருக்கும். அதுவே Cold War காலத்திலும் நிகழ்ந்தது.
Cold War கால ஆரம்பத்திலும் இந்தியா இவ்வகை அணிசாரா கொள்கையை கடைப்பிடிக்க முனைந்து பின்னர் தோல்வி கண்டிருந்தது. அப்போது நடுநிலை கொள்கையில் இருங்க விரும்பிய இந்தியாவை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் விரட்ட, வேறு வழியின்றி இந்தியா ரஷ்யா பக்கம் சாய்ந்து இருந்தது.
சீனாவும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக திடமான கருத்துக்களை கூறாவிடினும், நேட்டோ கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்க்கும் ரஷ்யாவின் கொள்கைகளுக்கு திடமான ஆதரவு வழங்கி உள்ளது. பதிலுக்கு ரஷ்யாவும் தாய்வான் சீனாவின் அங்கம் என்று கூறி இருந்தது.
தற்போது மேற்கு நாடுகள் மட்டுமே ரஷ்ய சனாதிபதி பூட்டினை வன்மையாக சாடி உள்ளன. மேற்கு நாடுகள் புதிதாக சீனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளை கொண்ட Quad அணியில் உள்ள இந்தியாவும் பூட்டினை சாடுவதை எதிர்பார்க்கின்றன. ஆனால் இந்தியா மெல்ல நழுவி தப்புகிறது. எல்லா பகுதிகளும் முரண்பாடுகளை பேசி தீர்க்கவேண்டும் என்கிறது இந்தியா.