(இளவழகன், 2022-01-22)
போன இடத்து அரசியல் இலாபங்களுக்காக தப்பி ஓடியவர்களும், இவர்களின் வாக்குகளை பெற இவர்கள் போடும் புண்ணாக்கையும் உன்ன தயாராக உள்ள போன இடத்து அரசியல் வாதிகளும் செய்யும் இன்னோர் கூத்துதான் “Thai Pongal & Tamil Heritage Month Celebrations”. முதலில் கனடா, பின் இலண்டன்.
(கவனிக்க: Thai என்ற பதம் ஆங்கிலத்தில் ஏற்கனவே தாய்லாந்தை – Thailand – குறிக்க பயன்படுகிறது. அதனால் Thai Pongal “தாய் பொங்கல்” என்றே பொருள்படும்).
தப்பி ஓடியவர்கள் தமிழ் கலாச்சாரம் ஓடிய இடமெல்லாம் வளர்கின்றது என்று தம்பட்டம் அடித்தாலும் கவலைக்குரிய காரணங்களால் யாழ்ப்பாணத்தில் கலாச்சாரங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
2022ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு பொங்குமிடத்தை முற்றத்தில் மெழுக மாட்டு சாணம் கிடையாது. பதிலுக்கு புற்று மண்ணே பயன்படுத்தப்பட்டது. மெழுக மட்டுமல்ல, பிள்ளையார் பிடிக்கவும் ஒருபிடி சாணம் பெறுவது கடினம். இந்நிலை நிகழ்வது வடமராட்சியில், நடு கரவெடியில், ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பல மாடுகளை கொண்டிருந்த இடம்.
ஏன் சாணம் கிடையாது? யாழ்ப்பாணத்தில் வீடுகள் எல்லாம் மெல்ல வயோதிபர் இல்லங்களாகும் காலத்தில் மாடு வளர்க்க முடியாது உள்ளது. இதற்கு கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய திருடர் பயமே காரணம்.
ஒருமுறை காணி ஒன்றில் கட்டியிருந்த வயிற்றில் கன்றுடன் இருந்த மாடு ஒன்றை இழுத்து சென்று அத்துளு வயலில் வெட்டி இறைச்சியை மட்டுமே எடுத்து சென்ற கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய தமிழரும் உண்டு.
கனடா, லண்டன் போன்ற இடங்களில் Tamil Heritage கொண்டாட தாய்லாந்தில் இருந்து தேங்காய், தேங்காய் பால், வாழையிலை வருவது போல் சாணமும் வரலாம். அதனால் இதை Thai/தாய் பொங்கல் என்று அழைப்பதில் அர்த்தமும் உண்டு.
அங்கே மரம் படுகிறது. இங்கே கொப்புகள் தளிர்ப்பதாக புளகாங்கிதம் கொள்கின்றன. தப்பி ஓடியவர்களின் இரண்டாம் சந்ததியின் பின் இந்த கொப்புக்கள் எல்லாம் கருகிவிடும்.
இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?