பர்மாவின் கிழக்கு எல்லை மாநிலமான Kayah யில் உள்ள Hpruso என்ற இடத்தில் பர்மாவின் இராணுவம் செய்த படுகொலைக்கு 35 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இருவர் Save the Children என்ற தொண்டர் அமைப்பின் ஊழியர் என்று Save the Children கூறியுள்ளது.
பெரு வீதி ஒன்றில் பயணித்தோரையே இராணுவம் வாகனங்களில் இருந்து வெளியேற்றி, கொலை செய்து, உடல்களை எரித்து உள்ளது என்று கூறப்படுகிறது. படுகொலை ஆதாரங்கள் தற்போதே பகிரங்கத்துக்கு வர ஆரம்பித்து உள்ளன.
பர்மாவின் இராணுவம் தாம் பயங்கரவாதிகளை மட்டுமே கொலை செய்ததாக கூறியுள்ளது. இந்த இராணுவத்துக்கு சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் இராணுவ பொருட்களை வழங்கி வருகின்றன.
இந்த மாநிலத்தில் Karenni National Defense Force என்ற ஆயுத குழு இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுகிறது.
முன்னர் சிறுபான்மை ரோஹிங்கியா மக்கள் மீது வன்முறைகளை செய்த பர்மாவின் இராணுவம் பெப்ருவரி மாதம் இராணுவ சதி மூலம் ஆட்சியை கைப்பற்றி தற்போது பெரும்பான்மை மக்கள் மீதும் வன்முறை செய்கிறது.
சனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்திருந்த Aung San Suu Kyi உட்பட எதிரி கட்சியினர் தற்போதும் சிறையில் உள்ளனர்.