65 வருடங்களின் பின் சீனா-தாய்வான் நேரடி பேச்சுவார்த்தை

Taiwan

மாஒ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் (Chinese Communist Party) பெரும் படையெடுப்புக்கு முகம் கொடுக்க முடியாத சீன தேசிய கட்சியினர் (Chinese National Party அல்லது KuoMinTang) அதன் தலைவர் ChiAng Kai-Sheck உடன் தாய்வான் என்ற தீவுக்கு தப்பினர். சுமார் 2 மில்லியன் KMT உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தப்பியதாக கூறப்படுகிறது.1949 முதல் 1987 வரை தாய்வானில் KMT தனிக்கட்சி ஆட்சி செய்து வந்திருந்தனர். பின்னர் அங்கு பல கட்சி அரசியல் உருவானது.

தாய்வான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதினாலும், அவர்கள் தமக்கென நாணயம், முப்படை என்றெல்லாம் வைத்திருந்தாலும் பெரும்பாலான நாடுகள் தாய்வானை இப்போது ஒரு தனி நாடாக கருதவில்லை. இதற்கு காரணம் சீனாவின் எதிர்ப்பே. ஆதியில் தாய்வான் தலைமையை முழு சீனாவுக்கும் தலைமையாக கருதிய மேற்கு நாடுகளும் நாடைவில் பெய்ஜிங் தலைமையை சீனாவின் தலைமை ஆக ஏற்றுக்கொண்டன. 1971 முதல் ஐ. நா. வும் பெய்ஜிங்கை சீனாவின் தலைமையாக ஏற்றுக்கொண்டது

தாய்வானின் நண்பனாக தொடர்ந்தும் இருந்துவந்த அமெரிக்கா 1979 ஆம் ஆண்டில் Taiwan Relation Act ஐ உருவாக்கியது. அதன்படி தாய்வானை அமெரிக்கா தனது இராணுவத்தை பயன்படுத்தி பாதுகாத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்கா பலவேறு காரணங்களால் தாய்வான் மீதான அக்கறையை குறைக்க தொடங்கியுள்ளது.

தாய்வானும் படிப்படியாக பெய்ஜிங்குடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த தொடங்கியது. நேரடி விமான சேவை, வர்த்தக முதலீடு என தொடர்புகள் வளர்ந்தன. இன்று செவ்வாய் இரு தரப்பும் சீனாவின் நான்ஜிங் என்ற இடத்தில் அரசமட்ட தொடர்புகளை ஆரம்பித்துள்ளனர். பேச்சுகளின் உள்ளடக்கங்கள் எதுவும் வெளியிடப்படாவிட்டாலும் இருதரப்பு தலைமைகளும் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.