பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகள் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தது 27 அகதிகள் பலியாகி உள்ளனர். இன்று புதன் காலை பிரான்சின் Calais பகுதிக்கு அண்மையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய படைகளும் மீனவரும் தேடுதலில் ஈடுபட்டு உள்ளனர்.
விபத்தின் பின் சிலர் உயிருடன் மீட்கப்பட்டும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது winter காலமாகையால் கால்வாய் நீர் மிகவும் குளிராக உள்ளது. குளிர் நீரில் நீண்ட நேரம் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.
புதன்கிழமை மட்டும் சுமார் 25 வள்ளங்கள் ஆங்கில கால்வாயை கடக்க முனைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. 2019ம் மற்றும் 2020ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டு பல மடங்கு அகதிகள் கால்வாயை கடந்தும் கடக்க முனைந்தும் உள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை சுமார் 25,700 பேர் கால்வாய் மூலம் வள்ளங்களில் பிரித்தானியா சென்று உள்ளனர். கடந்த ஆண்டு இக்காலத்தில் சுமார் 7,500 பேரே கடந்து இருந்தனர்.