ஜப்பானில் பல நற்பண்புகள் உண்டு. அதில் ஒன்று நேரம் தவறாமை. அண்மையில் ரயில் சாரதி ஒருவர் கடமையை நிறைவு செய்ய 1 நிமிடம் பிந்தியதால் அவருக்கு 56 ஜப்பானிய யென் ($0.49) தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தண்டத்தை எதிர்த்து சாரதி நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றம் செல்லும் சாரதி 2.2 மில்லியன் யென் ($19,407) நட்டஈடு பெற முனைகிறார்.
JR West என்ற ரயில் சேவையில் பணிபுரியும் மேற்படி சாரதி பயணிகள் அற்ற ரயில் ஒன்றை ஒரு ரயில் நிலையத்தில் இருந்து Okayama என்ற ரயில் திருத்தும் நிலையத்துக்கு எடுத்து செல்ல இருந்தது. ஆனால் அந்த சாரதி தவறான ரயில் நிலைய மேடையில் காத்திருந்தார். பின்னர் தவறை உணர்ந்து சரியான மேடைக்கு விரைந்துள்ளார். ஆனாலும் அவர் ரயிலை பொறுப்பெடுக்க 2 நிமிடங்கள் பிந்தியது. ஆனாலும் ரயிலை திருத்தும் இடத்தில் ஒப்படைக்க 1 நிமிடம் மட்டுமே பிந்தியது.
ஒரு நிமிடம் பிந்தியதால் முதலில் 85 யென் தண்டம் அந்த சாரதி மீது விதிக்கப்பட்டது. சாரதி Okayama Labour Standards Inspection Office என்ற அமைப்பில் முறையிட, தண்டம் 56 யென் ஆக குறைக்கப்பட்டது. அதையும் ஏற்க மறுக்கும் சாரதி தற்போது Okayama District Court என்ற நீதிமன்றம் செல்கிறார்.
ஊழியர்கள் பிந்தினால் நடைமுறை செய்யப்படும் ‘no work, no pay’ என்ற எல்லோருக்கும் பொதுவான அந்த ரயில் நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்பவே தாம் தண்டம் விதித்துள்ளதாக JR West ரயில் சேவை கூறியுள்ளது.
2017ம் ஆண்டு ஒரு ரயில் அட்டவணை நேரத்துக்கு 20 sec முன்னதாக பயணத்தை ஆரம்பித்ததால் பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தது. அங்கு ஒரு ரயில் 5 நிமிடத்துக்கும் மேலாக பிந்தினால், பயணிகளுக்கு ஒரு பத்திரம் வழங்கப்படும். எதிர்காலத்தில் பயணிகள் தாம் பிந்தினால் அந்த பத்திரம் மூலம் தவறிலிருந்து தம்மை விடுவிக்கலாம்.