COVID உதவி பணம் பெற்ற அமெரிக்க செல்வந்தர்

COVID உதவி பணம் பெற்ற அமெரிக்க செல்வந்தர்

கரோனா அமெரிக்காவை உலுக்கிய காலத்தில் பெருமளவு மக்கள் தமது தொழில்களை இழந்து இருந்தனர். சிறு வர்த்தகங்களும் அவ்வாறே பாதிக்கப்பட்டு இருந்தன. அவர்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்க அரசு உதவி பணம் வழங்கி இருந்தது. ஆண்டுக்கு $75,000 க்கும் குறைவாக உழைத்த தனிநபர்களுக்கு $1,200 பண உதவியும், $150,000 க்கும் குறைவாக உழைத்த குடும்பத்துக்கு $2,400 பண உதவியும் அரசால் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த உதவி பணம் பல பில்லியன் டாலர் கொண்ட செல்வந்தர்களுக்கும், சுமார் 270 மில்லியன் டாலர் கொண்ட செல்வந்தர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது என்று அறிந்துள்ளது ProPublica அமைப்பு. இவர்களில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு கரோனா உதவி பணம் கிடைக்க உதவியதாகவும், சிலருக்கு IRS என்ற அமெரிக்காவின் வரி திணைக்களம் தனது மூடத்தனத்தால் வழங்கியதாகவும் ProPublica கூறி உள்ளது.

George Soros என்ற செல்வந்தரிடம் $7.5 பில்லியன் டாலர் செல்வம் ($7,500 மில்லியன்) உள்ளதாக Bloomberg கூறியுள்ளது. இவருக்கும் COVID உதவி பணம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் அந்த காசோலையை திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. Ira Rennert என்ற செல்வந்தரிடம் $3.7 பில்லியன் டாலர் செல்வம் உள்ளதாகவும், அவருக்கும் COVID உதவி பணம் சென்றதாகவும் கூறுகிறது ProPublica. குறைந்தது 18 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்டோருக்கு COVID உதவி பணம் கிடைத்துள்ளது.

பெரும் செல்வந்தர் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி தமது வருமானங்களை குறைத்து காண்பிப்பார். அதனால் சுமார் 270 மில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்டோரும் COVID உதவி பணம் பெற்று உள்ளனர். சாதாரண மக்கள் மீது தமது பலத்தை காண்பிக்கும் வரி திணைக்களங்கள் பெரும் செல்வந்தர் மீது பயபக்தியுடனேயே செயல்படும்.

கரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள சுமார் 700 பில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்டோரின் மொத்த சொத்து சுமார் $2 டிரில்லியன் ($2,000,000 மில்லியன்) ஆல் அதிகரித்து உள்ளதாகவும் ProPublica கூறி உள்ளது.

https://www.propublica.org/article/how-these-ultrawealthy-politicians-avoided-paying-taxes