இன்று இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற G20 அமர்வில் பல நாடுகளில் இயங்கும் multinational நிறுவனங்கள் மீது குறைந்தது-15% (minimum corporate tax) வரியை நடைமுறை செய்ய அங்கத்துவ நாடுகள் இணங்கி உள்ளது. உண்மையில் இந்த இணக்கம் கடந்த ஜூலை மாதமே அறியப்பட்டு இருந்தாலும், இன்றே தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல நாடுகளில் இயங்கும் Apple, Google போன்ற மேற்கு நாடுகளின் பெரு நிறுவனங்கள் தமது இலாபத்தை வரி குறைந்த நாடுகளுக்கு நகர்த்தி, உரிய வரி செலுத்துவதில் இருந்து தப்புவதை தடுக்கவே இந்த குறைந்தது-15% என்ற வரிச்சட்டம் உருவாக்கப்படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளே இந்த புதிய வரியால் பெரும் பயன் அடையும். அமெரிக்கா முதலில் இந்த வரியை 21% ஆக கொண்டிருக்க விரும்பி இருந்தாலும், அது இறுதியில் 15% ஆக குறைக்கப்பட்டது.
இந்த புதிய குறைந்தது-15% வரி, அமெரிக்காவின் வரி வருமானத்தை $60 பில்லியனால் அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
இன்றைய அமர்வுக்கு சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் நேரடியாக கலந்து கொள்ளாது, வீடியோ தொடர்பு மூலம் பங்கு கொண்டிருந்தனர்.
G20 அமைப்பில் உலகின் மிகப்பெரிய GDP யை கொண்ட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம். உலக மொத்த GDP யின் 80% இந்த நாடுகளில் உள்ளது.