கரோனா காரணமாக வீழ்ச்சி அடைந்திருந்த உலக பொருளாதாரத்தின் மீட்சி மேலும் மந்தமாகவே இருக்கும் என்று IMF இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. புதிய கணிப்பின்படி உலக பொருளாதாரம் 5.9% ஆல் மட்டுமே வளரும். ஜூலை மாதம் கொண்டிருந்த கணிப்பிலும் இது 0.1% குறைவு.
அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் குறைவாக இருப்பதே பிரதான காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது. வறிய நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து வேகமாக வழங்கப்படாமையும் காரணமாக உள்ளது. Chip தட்டுப்பாடு காரணமாக ஜேர்மனியின் கார் உற்பத்தி வேலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளன.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பீட்டையும் IMF இன்று செவ்வாய்க்கிழமை 1% ஆல் குறைத்து உள்ளது. இதுவரை அமெரிக்காவின் இந்த ஆண்டு பொருளாதாரம் 7% ஆல் வளரும் என்று கூறிய IMF இன்று அது 6% ஆல் மட்டுமே வளரும் என்றுள்ளது.
சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 8% ஆல் வளரும் என்றும் IMF கூறியுள்ளது. இது முன்னர் 8.1% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும். ஜேர்மனியின் வளர்ச்சி 3.1% ஆகவும், ஜப்பானின் வளர்ச்சி 2.4% ஆகவும் இருக்கும்.
2022ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என்றும் IMF கூறியுள்ளது.