தென்சீன கடலில் நீருக்கு கீழே பயணித்த அமெரிக்க நீர்மூழ்கி ஒன்று அறியா பொருள் ஒன்றுடன் மோதியுள்ளது. அதில் பயணித்த படையினருக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், 15 படையினர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பாதிப்புக்களின் முழு விபரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
USS Connecticut என்ற இந்த அணுமின் மூலம் இயங்கும் (nuclear powered) நீர்மூழ்கி நீண்ட நேரம் கடலுக்கு கீழே பயணிக்கும் வசதி கொண்டது. Diesel எரிபொருள் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகள் வளியை பயன்படுத்துவதால், அவை அவ்வப்போது நீர்மட்டத்துக்கு வருதல் அவசியம்.
தென்சீன கடலில் தற்போது சீனாவுக்கும், அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்கிறது. சீனா தென்சீன கடலில் கடலை நிரப்பி தீவுகளை கட்டுவது, சீனாவின் இராணுவ வளர்ச்சி, சீன-தாய்வான் முரண்பாடு போன்ற பல விசயங்களில் அமெரிக்காவும், சீனாவும் முரண்பட்டு வருகின்றனர்.
சீனா தாய்வானை ஆக்கிரமிக்க தேவையான பலத்த 2025ம் ஆண்டு அளவில் பெற்றுவிடும் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் Chiu Kuo-Cheng புதன்கிழமை கூறியுள்ளார்.