பாலஸ்தீனியர் சார்பில் சிறிய, ஆனால் உறுதியான Oxfarm அழுத்தம்

SodaStream

பாலஸ்தீனியர் உரிமைகளுக்காக அவர்களை சுற்றியுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் கடந்த காலங்களில் யுத்தங்கள் வரை சென்றிருந்தாலும் நாளடைவில் அவர்களின் நடவடிக்கைகள் அவரவர் சொந்த நலன்களையே நோக்காக கொண்டிருந்தன. அதன் விளைவு நாளாந்தம் பாலஸ்தீனியர்களின் நிலங்கள் இஸ்ரவேலினால் அபகரிக்கப்பட்டு வந்தன. இந்த விடயத்தில் தன்னை ஒரு நடுவராக உட்புகுத்தும் அமெரிக்காகூட
இஸ்ரவேலின் நலன்களில் மட்டுமே நாட்டம் காட்டியது.

ஆனால் அண்மையில் ஐரோப்பிய சமூகம் புதியதோர் நியாயமான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன்படி பாலஸ்தீனியர்களின் நிலங்களில் சர்வதேச சட்டத்துக்கு முரணாக குடியிருக்கும் நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்திருப்பது குற்றம்.

ஐரோப்பிய சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் Oxfam என்ற சர்வதேச பொதுசேவை நிறுவனம் செயல்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான Scarlett Johansson 2005 ஆம் ஆண்டு முதல் Oxfam நிறுவனத்தின் தூதுவராக செயல்பட்டு வந்துள்ளார். அவர் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள அமெரிக்க Super Bowl விளையாட்டு போட்டியின்போது தொலைக்காட்சிகளில் இடம்பெறவுள்ள SodaStream என்ற நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் தோன்றவுள்ளார். (தொலைக்காட்சி நிறுவனங்கள் சுமார் அரை நிமிட விளம்பரத்துக்கு $4.5 மில்லியன் வரை அறவிடும்).

இந்த SodaStream நிறுவனம் பாலஸ்தீனியர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலமான West Bank இல் தனது பிரதான தொழில்சாலையை கொண்டுள்ளது. அதனால் இந்த நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வது ஐரோப்பிய சமூக சட்டத்துக்கும் Oxfam கொள்கைக்கும் முரணானது என்றபடியால் Johansson தனது Oxfam பதவியை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இவ்வகை நடவடிக்கைகள் இஸ்ரவேலை நாளடைவில் பெரிதும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.