ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகளின் கைகளில் பலியாகிய சில ஆப்கானிஸ்தானியர்களுக்கு பிரித்தானிய சுமார் $143.00 (104.17 பௌண்ட்ஸ்) ஐ மட்டுமே நட்டஈடாக வழங்கி உள்ளது என்று கூறப்படுகிறது. Action on Armed Violence (AOAV) என்ற தொண்டர் அமைப்பே இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.
Helmand மாகாணத்தில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகள் 2014ம் ஆண்டு வரை அங்கு சுமார் 7,000 பேருக்கு நட்டஈடு வழங்கி உள்ளது. குறைந்தது 16 சிறுவர்கள் உட்பட 289 பேர் பலியாகி அங்கு உள்ளனர். அதில் ஒரு 3 வயது சிறுவனும் அடங்கும்.
ஆனால் ஒருவரின் தொலைபேசி தொலைந்த பின் அவருக்கு 110 பௌண்ட்ஸ் நட்டஈடு வழங்கப்பட்டு இருந்தது. அதாவது தொலைந்த தொலைபேசிக்கு இறந்த ஒருவருக்கு வழங்கப்படத்திலும் அதிக நட்டஈடு வழங்கப்பட்டது.
2008ம் ஆண்டு பலியான 10 வயது சிறுவனுக்கு நட்டஈடாக 586.42 பௌண்ட்ஸ் வழங்கப்பட்டு இருந்தது. பலியான மேலும் 4 சிறுவர்களுக்கு மொத்தம் 4,233.60 பௌண்ட்ஸ் நட்டஈடு வழங்கப்பட்டு இருந்தது.
பலியான 289 பேருக்கும் பிரித்தானியா மொத்தம் 688,000 பௌண்ட்ஸ் நட்டஈடு வழங்கி உள்ளது. அது ஆளுக்கு சராசரி 2,380 பௌண்ட்ஸ் மட்டுமே. அதேவேளை காயமடைந்த 240 பேருக்கு பிரித்தானியா மொத்தம் 397,000 பௌண்ட்ஸ் நட்டஈடு செலுத்தி உள்ளது.
2006ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை அமெரிக்கா மரணம், காயம், சொத்து சேதம் ஆகிய காரணங்களுக்காக 1,600 பேருக்கு மொத்தம் $4.9 மில்லியன் நட்டஈடு வழங்கி உள்ளது.