அமெரிக்கா நேற்று பிரித்தானியாவுடனும் அஸ்ரேலியாவுடனும் செய்துகொண்ட AUKUS என்ற இராணுவ கூட்டு எதிரி நாடான சீனாவிலிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நேச நாடுகளில் இருந்தும் எதிர்ப்பை பெற்றுள்ளது.
2016ம் ஆண்டு அஸ்ரேலியா பிரான்சிடம் இருந்து 12 அணுமின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும், நேற்று அந்த இணக்கத்தை அஸ்ரேலியா முறித்துள்ளது. பதிலாக தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளையே அஸ்ரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. அதனால் பிரான்ஸ் விசனம் கொண்டுள்ளது.
பிரான்சின் வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian புதிய அணியின் செயல் பிரான்சின் முதுகில் குத்துவது (stab in the back) போன்றது என்று விபரித்துள்ளார்.
1980களில் இருந்து நியூசிலாந்து அணு சக்தி கொண்ட ஆயுதங்கள் மற்றும் அணு சக்தியில் இயங்கும் கப்பல்கள் ஆகியன தனது நாட்டுள் புகுவதை தடை செய்துள்ளது. அது அஸ்ரேலியா அணு சக்தி கொண்ட இராணுவ தளபாடங்களை கொண்டிருப்பதையும் நிராகரித்து உள்ளது. அதனால் அஸ்ரேலிய அணுமின் நீர்மூழ்கிகள் நியூசிலாந்து செல்வது தடுக்கப்படும்.
அமெரிக்கா தலைமையிலான Five-eye அணியில் அஸ்ரேலியா, பிரித்தானியா மட்டுமன்றி நியூசிலாந்தும், கனடாவும் கூடவே அங்கம்.
சீனா-தாய்வான் முரண்பாடு யுத்தத்துக்கு சென்றால், AUKUS இணக்கப்படி பிரித்தானியாவும் யுத்தத்தில் பங்களிக்க வேண்டியிருக்குமா என்று பிரித்தானிய முன்னாள் பிரதமர் Theresa May கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian புதிய AUKUS கூட்டமைப்பு பசுபிக் பகுதியில் ஆயுத போட்டியை அதிகரிக்கும் என்றுள்ளார். அத்துடன் அமெரிக்கா cold-war மனோநிலையில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.